
இலங்கையில் தரம் 7 முதல் தரம் 13 வரையான பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி ஏற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக 12 வயது முதல் 18 வயது வரையான பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
ZOOM தொழில் நுட்பத்தனுடாக நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
உலக சுகாதார ஸ்தாபனம், பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றுவது பற்றிய சிபார்சுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதற்கேற்ப பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதன் அவசியத்தை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொவிட்-19 தொற்றினால் ஒன்றரை வருட காலமாக பாடசாலைகள் அவ்வப்போது மூடப்படுகின்றன. இதேவேளை, பாடசாலைகளை விரைவில் ஆரம்பிப்பதாயின் மாணவர்கள் தடுப்பூசி ஏற்றியிருக்க வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார்.
20 வயதிலிருந்து 29 வயதிற்கு உட்பட்டவர்களில் 34 வீதமானோருக்கு தற்போது தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.