செப்டம்பர் 10 இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்
சமூகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகளும் குறைப்பதற்கான சில தடுப்பு முறைகளும்
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 10 அன்று அனுசரிக்கப்படும் உலக தற்கொலை தடுப்பு தினமானது தற்கொலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்துடன் தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் ஒரு வழியாக அமையப்படுகின்றது. உலக தற்கொலை தடுப்பு அமைப்பு இந்த வருடம் செப்டம்பர் 10 உலக தற்கொலை தடுப்பு தின கருப்பொருளாக ‘செயற்பாடு மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்’ (Creating Hope Through Action) என்பதை பரிந்துரைத்துள்ளது.
இதன் பொருள் தற்கொலைக்கு பதிலாக ஒரு மாற்றுவழி இருக்கிறது என்பதையும், அதனால் நம் அனைவரிடமும் நம்பிக்கையையும் தெளிவையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொணடதுமாகும். நம் செயற்பாடுகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும், தற்கொலை எண்ணத்துடன் போராடுபவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கலாம். தற்கொலையைத் தடுப்பது பெரும்பாலும் சாத்தியமாகும், அதைத் தடுப்பதில் எம் ஒவ்வொருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது. எம் செயலின் மூலம், ஒருவரின் இருண்ட தருணங்களில் – சமூகத்தின் அங்கமாக, பெற்றோராக, நண்பராக, சக ஊழியராக அல்லது அயல்வீட்டாராக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
தற்கொலை நெருக்கடியை அனுபவிப்பவர்கள் அல்லது தற்கொலையால் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதில் நாம் அனைவரும் பங்கு வகிக்கலாம் என்ற கருத்துக்களை இவ்வருடத்திற்கான தொனிப்பொருள் வலியுறுத்துவதாக அமைகின்றது.
உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின்படி ஒவ்வொரு வருடமும் சுமார் 1 மில்லியன் மக்கள் தற்கொலையால் இறக்கின்றனர். பொதுவாக நம்மில் பலரிடம் எழும்பும் வினாக்களாக, தனிநபர்கள் தங்கள் உயிரை அழித்துக் கொள்ள எது தூண்டுகிறது? மன அழுத்தம் மற்றும் விரக்தியின் பிடியில் உள்ளவர்களும் இல்லாதவர்களும் தங்களை மாய்த்துக்கொள்ள காரணமாக அமைவது எது என்பதாகும். இதனை புரிந்துகொள்வது மிகவும் கடினமாக உள்ளது.
தற்கொலை என்பது தாங்க முடியாத துன்பத்திலிருந்து தப்பிக்க எடுக்கின்ற ஒரு தீவிர முயற்சியாகும். சுய வெறுப்பு, நம்பிக்கையின்மை மற்றும் தனிமை உணர்வுகளால் கண்மூடித்தனமாக, மரணத்தைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். இதற்கு அரர்களின் சிந்தனைவட்டம் குறுகிக் காணப்படுவதே காரணமாக உள்ளது. பலரிடம் கவலையை போக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தபோதிலும், பெரும்பாலானவர்கள் தற்கொலை எண்ணமுள்ளதால் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வதை இலக்காக கொண்டுள்ளனர்.
தற்கொலை தவிர்ந்து வாழ்தலுக்கு எத்தனையோ மாற்று வழிகள் இருக்கின்றது என்பதை அவர்கள் சிந்தித்தாலும் அவர்களால் மாற்று வழி ஒன்றைப் பார்க்க முடிவதில்லை. உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி. •உலகம் முழுவதும் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 800,000 மக்கள் தற்கொலை செய்கின்றனர்.
•ஒவ்வொரு தற்கொலையும் பலரிடம் தற்கொலை முயற்சியை ஊக்குவிக்கிறது. ஒரு தற்கொலை முயற்சி மக்களின்; தற்கொலைக்கான மிக முக்கியமான ஆபத்து காரணியாகும்
•உலகளாவிய ரீதியில் 15-19 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்திற்கு நான்காவது முக்கிய காரணம் தற்கொலை.
•77% உலகளாவிய தற்கொலைகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றன.
•விசம் அருந்துதல், தூக்குப்போடுதல் மற்றும் துப்பாக்கிகளை உபயோகித்தல், தொடரூந்தை பயன்படுத்துதல் போன்றன உலகளவில் தற்கொலைக்கான பொதுவான வழிகளாக பின்பற்றப்படுகின்றது.
தற்கொலை என்பது அதிக வருமானம், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் மட்டுமல்ல, உலகின் அனைத்துப் பகுதிகளிலும் நிகழ்கிறது. ஒவ்வொருவரின் தற்கொலையும் குடும்பங்கள், சமூகங்கள் மீது நீண்டகால பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. தற்கொலை ஒரு தீவிர பொது சுகாதார பிரச்சனையாக காணப்படுவதனால் சரியான நேரத்தில், முறையான தலையீடுகளால் அதிகமான தற்கொலைகள் தடுக்கப்படுகின்றன. இருப்பினும் இன்னும் விரிவான தற்கொலை தடுப்பு உத்திகள் அவசியம் தேவைபாடுடையதாக அமைகின்றது.
தற்கொலைக்கான அறிகுறிகள்
•தற்கொலையைப் பற்றி பேசுவது – தற்கொலை, இறத்தல் அல்லது சுய-தீங்கு பற்றிய பேச்சும், ‘நான் பிறந்ததே பாவம் என்று நினைக்கிறேன்’ ‘நான் உன்னை மீண்டும் பார்ப்பேனோ தெரியாது …’ மற்றும் ‘நான் இறந்துவிடுவது நல்லது…’ போன்ற பேச்சு வெளிப்பாடுகள்.
•அபாயகரமான வழியைத் தேடுவது – தற்கொலை முயற்சியில் பயன்படுத்தக்கூடிய நச்சு திரவங்கள், மாத்திரைகள், கத்திகள் அல்லது தீங்கு தரும் பிற பொருட்களை அணுகுவது.
•மரணத்தில் ஈடுபாடு – மரணம், இறப்பு அல்லது வன்முறையில் ஈடுபாடு. மரணம் பற்றிய கவிதைகள் அல்லது சோகக் கதைகளை எழுதுதல்.
•எதிர்காலத்தில் நம்பிக்கை இல்லை – உதவியற்ற தன்மை, நம்பிக்கையின்மை மற்றும் சிக்கிக்கொண்ட உணர்வுகள். வாழ்க்கை ஒருபோதும் சந்தோசமாக அமையாது அல்லது மாறாது என்ற தீவிர நம்பிக்கையை வெளிப்படுத்துதல்.
•சுய வெறுப்பு – பயனற்ற உணர்வு, குற்ற உணர்வு, அவமானம் மற்றும் சுய வெறுப்பு. ஒரு சுமையாக உணர்கிறேன் (‘நான் இல்லாமல் எல்லோரும் நன்றாக இருப்பார்கள்).
•நடத்தை மாற்றங்கள் – ஏனையோர் மீது திடீரென விருப்பத்தைக் காட்டல்;. மதிப்புமிக்க உடைமைகளை வழங்குதல். குடும்ப உறுப்பினர்களுக்கான தேவைப்பாடுகளை செய்தல். பலகாலமாக கோபமுள்ளவர்களுடன் கதைத்தல்.
•விடைபெறுதல் – அசாதாரண அல்லது எதிர்பாராத வருகைகள் அல்லது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்புகள். மீண்டும் பார்க்க முடியாது என்பது போல் மறைமுக பேச்சு மற்றும் செயற்பாடுகள்.
•விலகியிருத்தல் – நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து விலகியிருத்தல். தனிமை அதிகரிக்கும். தனியாக இருப்பதற்கு விரும்புதல்.
•சுய அழிவு நடத்தை -அதிகரித்த மது அல்லது போதைப்பொருள் பயன்பாடு, பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல், பாதுகாப்பற்ற உடலுறவு. தேவையற்ற அபாயங்களை எதிர்கொள்வது.
•திடீர் அமைதி மற்றும் மிகையுணர்வு – மிகுந்த மன உளைச்சலுக்குப் பிறகு திடீரென அமைதியும் மகிழ்ச்சியும் உணர்வது.
தற்கொலைக்கான காரணிகள்
தற்கொலை எண்ணம் கொண்ட கணிசமான மக்கள் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் இரகசியமாக வைத்திருப்பார்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான எந்த அடையாளத்தையும் காட்டுவதில்லை. ஒரு சூழ்நிலையை சமாளிக்க முடியாது என்று ஒரு நபர் உணரும்போது தற்கொலை எண்ணம் ஏற்படலாம். இது நிதி சிக்கல்கள், நேசிப்பவரின் மரணம், உறவின் முறிவு அல்லது பலவீனப்படுத்தும் நோய் அல்லது உடல்நிலை ஆகியவற்றால் கூட ஏற்படலாம். பொதுவான தற்கொலை காரணிகளாக பின்வருவன அமைகின்றது.
•குடும்ப வரலாறு
•குழந்தை துஷ்பிரயோகம், புறக்கணிப்பு அல்லது அதிர்ச்சி
•மனநலப் பிரச்சினைகள்
•நம்பிக்கையில்லா உணர்வு
•தற்கொலை செய்து கொண்ட ஒருவரை அறிதல், அடையாளப்படுத்துதல்
•பொறுப்பற்ற அல்லது மனவெழுச்சி நடத்தை
•தனிமை அல்லது தனிமை உணர்வு
•குடும்ப அல்லது வீட்டு ஆதரவு இன்மை.
•மனநலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அணுக முடியாமை
•வேலை, நண்பர்கள், நிதி அல்லது அன்புக்குரியவர் இழப்புகள்
•உடல் நோய் அல்லது உடல் நிலை
•பிரச்சினைகளுக்கு பயம் அல்லது வெட்கம்; காரணமாக உதவியை நாடாமை
•குடும்பத்தின் மற்றும் சமூகத்தின் பாரபட்சம் மற்றும் பாரபட்சம் காரணமாக மனஅழுத்தம்.
•சமூக மற்றும் கலாச்சார அழுத்தங்கள்
•முன்னர் தற்கொலைக்கு முயன்றவர்கள் மற்றும் தற்கொலை செய்தவர்கள்.
•கொடுமைகளுக்கு உள்ளாதல் அல்லது அதிர்ச்சியை அனுபவித்தல்
•குற்ற மற்றும் சட்ட சிக்கல்கள் அல்லது தீர்க்க முடியாத கடன்கள்.
•மருந்துகள் அல்லது போதைக்கு அடிமையாக காணப்படல்.
தற்கொலை தடுப்பு முறைகள்
•தொழில்முறை உதவியைப் பெறுதல். தற்கொலை செய்து கொள்ளும் நபருக்குத் தேவையான உதவியைப் பெற உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். ஆலோசனை மற்றும் பரிந்துரைகளுக்கு ஒரு மனநல நிபுணரை அணுகி சிகிச்சை வசதியைக் கண்டறியவும் அல்லது ஒரு மருத்துவரின் சந்திப்புக்கு அழைத்துச் செல்லவும் நபரை ஊக்குவிக்கவும்.
•சிகிச்சையைப் பின்தொடர்தல். மருத்துவர் மருந்துகளை பரிந்துரைத்தால் குறித்த நபர் அதை பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் பக்கவிளைவுகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் அந்த நபர் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால் மருத்துவரிடம் தெரிவிக்கவும். ஒரு குறிப்பிட்ட நபருக்கு சரியான மருந்து அல்லது சிகிச்சையை கண்டுபிடிக்க நேரம் மற்றும் விடாமுயற்சி தேவை.
•உதவத்தயாராக இருங்கள். தற்கொலை செய்ய நினைப்பவர்கள் பெரும்பாலும் தங்களுக்கு எவரும் உதவ முடியும் என்று நம்புவதில்லை, எனவே நீங்கள் உதவி வழங்குவதில் அதிக முனைப்புடன் இருக்க வேண்டும். ‘உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால் என்னை அழைக்கவும்’ என்று சொல்வது பயனற்றது.
•நேர்மறையான வாழ்க்கை முறை மாற்றங்களை ஊக்குவித்தல் – ஆரோக்கியமான உணவு, தூக்கம் மற்றும் இயற்கைச்சூழலில் குறைந்தது 30 நிமிடங்கள் ஒவ்வொரு நாளும் இருக்கச் செய்வது சிறந்தது. உடற்பயிற்சியும் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது பயன்தரக்கூடிய இராசயானங்களை வெளியிடுகிறது, மன அழுத்தத்தை நீக்குகிறது.
•பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்குங்கள். ஒரு தற்கொலை நெருக்கடியின் போது அவர்கள் பின்பற்றுவதாக உறுதியளிக்கும் படிநிலைகளின் தொகுப்பை உருவாக்க உதவுங்கள். ஒரு தற்கொலை நெருக்கடிக்கு வழிவகுக்கும் எந்த தூண்டுதல்களையும் அது அடையாளம் காண வேண்டும்.
•தொடர்புகளை பேணுதல் – நபரின் மருத்துவர் அல்லது சிகிச்சையாளருக்கான தொடர்பு எண்களையும், அவசரகாலத்தில் உதவும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் அறிந்து வைத்திருக்கவும்.
•தற்கொலைக்கான சாத்தியமான வழிகளை அகற்றவும் – தேவையறற்ற தீங்குதரக்கூடிய பொருட்களை குறித்த நபர்களின் சூழலிருந்து அகற்றுங்கள். அதிமான மருந்தை உட்கொள்ள வாய்ப்பு இருந்தால், மருந்துகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் அல்லது அந்த நபருக்குத் தேவைப்பட்டால் மட்டுமே கொடுக்கவும்.
•நீண்ட காலத்திற்கு உங்கள் ஆதரவைத் தொடருங்கள் – உடனடி தற்கொலை அழுத்தங்கள் கடந்த பிறகும், அந்த நபருடன் தொடர்பில் இருங்கள், அவ்வப்போது மறைமுகமாக அறிந்து கொண்டு குறித்தநபர்; மீட்புப் பாதையில் இருப்பதை உறுதிப்படுத்த உங்கள் ஆதரவு இன்றியமையாதது.
உடலில் ஏற்படும் நோய்களுக்கு உடனடியாக தீர்வு வேண்டி மருத்துவரை அணுகக் கூடிய நாம், மன ரீதியான பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. சமூகத்தில் உறவினர்கள், நண்பர்கள் மன அழுத்தத்தில் இருந்தால் அதை கண்டறிந்து அதற்கான தீர்வை எடுப்பது நம் கடமை. உலக அளவில் மன அழுத்தத்தால் 35 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
ஆரம்ப நிலையில் உள்ள பிரச்சனைகளுக்கு மனநல ஆலோசகரிடம் சென்றால் உளவளத்துணை மூலம் பிரச்சனையை தீர்க்கலாம். ஆனால் இப்படி ஒரு விஷயம் இருப்பதே அதிகமான மக்களுக்கு தெரியாது என்பது மறுக்கமுடியாத உண்மை. தீவிரமாகியுள்ள உளப்பிரச்சனைகளுக்கு மருந்துகளுடன் கூடிய ஆலோசனை தேவைப்படலாம். நமது சமூகத்தில் இத்துறையில் நிபுணர்களை அதிகமாக உருவாக்க வேண்டும்.
அதிகமான தற்கொலைகள் குடும்பப் பிரச்சனைகள் காரணமாகத்தான் ஏற்படுகின்றன. கணவன், மனைவியிடையே பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை, ஒருவொரை மற்றொருவர் புரிந்துக் கொள்ளாமை போன்றவையே முதற்காரணங்களாக நமது சமுதாயத்தில் இருக்கின்றன.
குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களுக்கு உளரீதியான ஆறுதலுடன் ஒத்துழைப்பை அளித்து அவர்கள் நம்பிக்கையுடன் உலகில் வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
(Dr.K.Kajavinthan. Senior Lecturer in Psychology, Deparment of Philosophy and Psychology. University of jaffna)