நுவரெலியா டின்சின் தோட்டத்தின் வனப்பகுதிக்குள் தனது தயாருடன் ஞாயிற்றுக்கிழமை (05) விறகு சேகரிக்கச் சென்ற வேளையில் காணாமல் போயிருந்த ஜே.பாலன் காத்முனா தரணி என்னும் (25) வயது யுவதியை தேடும் பணிகளை இரண்டு அதிகாரிகள் மற்றும் 22 இராணுவ சிப்பாய்களை அடங்கிய 3 வது இலங்கை இராணுவ சிங்கப் படையணியினரால் பொலிஸார் மற்றும் தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து ஆரம்பித்திருந்த நிலையில் குறித்த யுதவியை நேற்று முன்தினம் (9) மாலை 6.30 மணியளவில் மீட்டு உடனடியாக நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அடர்ந்த வனப்பகுதிக்குள் மோசமான வானிலை நிலவிய போதிலும் தேடுதல் பணிகளை முன்னெடுத்த குழுவினர் வனத்திற்குள் முற்றாக வரண்டு கிடக்கும் பகுதியொன்றுக்குள் இருந்து குறித்த யுவதியை மீட்டுள்ளனர். 535 கே, பம்பரகல, அளுத்கொலனிய, சாந்திபுர என்னும் முகவரியில் வசிக்கும் குறித்த யுவதி தனது தாயுடன் விறகு சேகரிக்க அந்தப் பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் அவர் வீட்டிற்கு வந்து சேரவில்லை என்பதால் அவரது தாயார் மகள் இருக்கும் இடத்தை கண்டறிவதற்கான உதவிகளை நாடடியிருந்தார்.
தகவல் கிடைத்தவுடன் சில மணி நேரங்களுக்குள் மேற்படி ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. கடந்த நான்கு தினங்களாக தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்த தேடுதல் குழுவினருக்கு தோட்ட தொழிலாளர்களும் ஒத்துழைப்புடன் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டதோடு தற்பொழுது நுவரெலியா பொலிஸாரால் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, 11 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 112 வது பரிகேட் தளபதியின் வழிகாட்டலுக்கமைய 3 வது இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரியின் தலைமையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.