இலங்கை மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமனம், 2021 செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால், இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அவர் தனது கடமைகளை, இம்மாதம் 15ஆம் திகதியன்று பொறுப்பேற்கவுள்ளார்.
பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால் அவர்கள், இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளதோடு, சுமார் 9 வருடக் காலப்பகுதி வரை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் ஏற்கனவே கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினரான அஜித் நிவாட் கப்ரால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்களுக்கு இன்று (13) எழுத்துமூலம் அறிவித்ததுடன், ஒன்பதாவது பாராளுமன்றத்தில் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராகக் கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.