எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் உயர் நீதிமன்றத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டதனை இரத்து செய்யக் கோரி இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான, மனுஷ நாணயக்கார ஆகியோரால் குறித்த இரு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய நிதி மோசடி குற்றச்சாட்டு உள்ளதாக மனுதாரர்கள் தங்களது மனுவில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இம் மனுக்களின் பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் நாணய சபை, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.