crossorigin="anonymous">
வெளிநாடு

ஜி20 மாநாட்டில் சீனா, ஆப்கானிஸ்தான் மீதான பொருளாதார தடை நீக்கலாம் என சிபாரிசு

ஆப்கானிஸ்தான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கலாம் என்று ஜி20 மாநாட்டில் சீனா சிபாரிசு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியமைத்துள்ளனர். முல்லா ஹசன் அகுந்த் பிரதமராகவும், முல்லா பரதார் துணைப் பிரதமராகவும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். ஆண்கள் மட்டுமே கொண்ட அமைச்சரவை அமைந்துள்ளது.

இந் நிலையில், ஆப்கானிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. தலிபான் ஆட்சிக்கு அஞ்சி பெரும்பாலான நாடுகள் ஆப்கன் மீதான கொள்கையைத் தெரிவிக்காமல் மவுனம் காக்கின்றனர். அண்டை நாடான பாகிஸ்தான், அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ரஷ்யா, தலிபான்கள் தங்களின் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நட்புக்கான சமிக்ஞைகளைக் கடத்தியுள்ளது. தலிபான்களோ தங்களின் தேசத்தை மீள் கட்டமைக்க சீனா மற்றும் ரஷ்ய நிதியையே நம்பியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பேசிய வெளியுறவு அமைச்சர் வாங் யி, “ஆப்கனின் அந்நியச் செலாவணி அந்நாட்டின் சொத்து. அது அவர்களுக்கே சேர வேண்டும். ஆப்கன் மீதான பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் விலக்கிக் கொள்ள வேண்டும்.

சர்வதேச நாடுகள் ஆப்கன் அரசை அங்கீகரிக்க வேண்டும். ஆப்கனின் வெளிநாட்டு நிதி ஆதாரங்களை முடக்கி வைத்து அந்த நாட்டுக்கு அரசியல் அழுத்தம் தரக்கூடாது. அவர்களின் நிதியை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடாது. ஆப்கன் மக்களுக்காக கூடுதலாக நிதியுதவி செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தான் நெருக்கடியில் இருக்கிறது. அதன் நெருக்கடி காலத்தில் மிக அவசரமானத் தேவைகளுக்கு நிதியை விடுவிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் நிலவும் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்

அதேவேளையில், ஆப்கானிஸ்தானும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளையும் கட்டுப்படுத்தி தனது வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக ஆப்கானிஸ்தான் தலைவர்களுடன் சீன, ரஷ்ய, பாகிஸ்தான் சிறப்புத் தூதர்கள் சந்தித்துப் பேசினர். இந்தச் சூழலில் தற்போது சீனா ஆதரவுக் குரல் கொடுத்துள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகமானது, ஆப்கானிஸ்தானின் அமைதி, வளத்திற்காக, பிராந்திய வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக சில ஆக்கபூர்வமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளது என்று ஸ்புட்னிக் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.(இந்து)

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 57 = 59

Back to top button
error: