கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு
உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
இந்திய 2005,பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 12-வது பிரிவின்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தின் அடிப்படையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (24) விசாரணைக்கு வருகிறது
உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் அசோக் பூஷான், எம்.ஆர். ஷா முன்னிலையில் விசாரிக்கப்பட உள்ளது. வழக்கறிஞர்கள் ரீபக் கான்சல், கவுரவ் குமார் பன்சல் இருவரும் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
வழக்கறிஞர் ரீபக் கான்சல் தன்னுடைய மனுவில் கூறியிருப்பதாவது
“ கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திநருக்கு மத்தியஅரசின் விதிமுறைகளின்படி உடனடியாக நிவாரண உதவி வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
தங்களுடைய குடும்ப உறுப்பினர் எந்த நோயால் உயிரிழந்தார், இறப்புக்கான காரணம் என்ன என்பதை அரசின் அதிகாரபூர்வ ஆவண அடிப்படையில் அறிந்து கொள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், கரோனாவில் உயிரிழந்ததாகக் கூறப்படும் நபர்களுக்கு உடற்கூறு ஆய்வு செய்து கொரோனாவில்தான் உயிரிழந்தார்களா என்று மருத்துவர்கள் சான்று ஏதும் அளிக்கவில்லை, எந்த உடற்கூறு ஆய்வும் செய்யப்படவில்லை.
ஆதலால், உயிரிழந்தவர் எவ்வாறு உயிரிழந்தவர் , எந்த காரணத்தால் உயிரிழந்தார் என்பது குறித்த இறப்புச் சான்றிதழையும், அல்லது கடிதத்தையும் அந்தந்த மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கிட உத்தரவிட வேண்டும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது பெருந்தொற்று என உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், மாநில பேரிடர் நிவாரண நிதியின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும்.
தேசிய பேரிடர் மீட்பு நிதி, மாநில பேரிடர் மீட்பு நிதியில் மத்திய அரசு செய்த திருத்தப்பட்ட பட்டியல், விதிகளின்படி, 2005,பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 12-வது பிரிவின்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும்.
உச்ச நீதிமன்றம் தலையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நிவாரண நிதியை மாநில அரசுகள் வழங்கவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றவும் உத்தரவிட வேண்டும்”
இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.(நன்றி-இந்து)