இந்தியா – வடக்கு டெல்லியில் நீதிமன்ற வளாகத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு
இந்தியா – வடக்கு டெல்லியில் ரோகிணி பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் கடந்த 24-ம் தேதி வழக்கம் போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது நீதிமன்ற அறை எண் 207 அருகே திடீரென துப்பாக்கிச் சுடும் சப்தம் கேட்டதால் பலரும் அலறியடித்து ஓடினர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீஸார் விரைந்தனர்.
அப்போது இரு வேறு ரவுடி கும்பல்கள் மோதிக்கொண்டன. வழக்கறிஞர்கள் உடையில் வந்த ஒரு கும்பல் மற்றொரு ரவுடி கும்பல் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இரு தரப்பினர் மோதலை தடுக்க போலீஸார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் உத்தரப் பிரதேசம், ஹரியாணா, மாநிலங்களில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ரவுடி ஜிதேந்தர் மான் கோகியும் உயிரிழந்தார். நீதிமன்றத்தில் ரவுடிகள் மோதிக் கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந் நிலையில் ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட தகவல்களை சிறையிலிருந்தவாறே உடனுக்குடன் செல்போனில் தனது சகாக்களிடமிருந்து மற்றொரு ரவுடி பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. `ரன்னிங் கமன்ட்ரி` போல அவர் தகவல்களைக் கேட்டுப் பெற்றுள்ளார்.
இது குறித்து அந்த வட்டாரங்கள் கூறும்போது, “ஜிதேந்தர் மான் கோகியின் எதிரியாக இருப்பவர் தில்லு தாஜ்புரியா. இவர் தற்போது சிறையில் உள்ளார். ஜிதேந்தர் மானுக்கும், தில்லு தாஜ்புரியாவுக்கு நீண்ட காலமாக பகையுணர்வு இருந்து வந்தது.
பாதுகாப்பில் குறைபாடு? இந்நிலையில் ஜிதேந்தரை கொல்ல சிறையிலிருந்தபடியே ஆட்களை அனுப்பியுள்ளார் தாஜ்புரியா.
ஜிதேந்தர் மானை கொல்ல ஆட்கள் சென்றபோது அந்த நபர்களிடமிருந்து செல்போனில் தகவல்களை `ரன்னிங் கமன்ட்ரி’ போல் கேட்டுப் பெற்றுள்ளார் தாஜ்புரியா. இதனால் டெல்லி சிறைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் போன் செய்து தகவல்களை பெற்றுள்ளார் தாஜ்புரியா. ரோகிணி நீதிமன்ற வளாகத்தில் இருந்து, ஜிதேந்தர் மான் எவ்வளவு தூரம் இருக்கிறார். அவர் நீதிமன்றத்துக்கு வந்துவிட்டாரா போன்ற தகவல்களை தாஜ்புரியா பெற்றுள்ளார். கைது செய்யப்பட்ட வினய், உமங் ஆகியோரிடமிருந்து இந்த தகவல்களை ராஜ்புரியா பெற்றுள்ளார் என்று தெரிவித்தன.(இந்து)