எயாபோஸ் (AIRFORCE) யாசீன் என்றால் மாவனல்லையில் தெரியாதவர் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவு எல்லோருடனும் கலகலப்பாக பேசி உறவுகொண்டாடும் ஒர் நபர். அவருடைய பேரிழப்பு குடும்பத்துக்கோ, மாவனல்லைக்கோ மட்டுமல்ல நாட்டுக்கே என்றால் மிகையாகாது.
தனது நாட்டுக்காக நாட்டுப்பற்றுடன் விமானப்படையில் போர்காலங்களில் கூட முனைப்புடன் பணிபுரிந்தவர். தன் முன்னே குண்டுகள் வெடிக்கும் என தன் போர்கால நினைவுகளை என்னிடம் சொன்னது இன்னும் எனக்கு அப்படியே யாபகம் இருக்கிறது.
அதுமட்டுமன்றி பாரம் தூக்குதல் போட்டியில் மிகத்திறமையாக விளையாடிய இவர் இந்நாட்டின் முன்னாள் பாரம்தூக்குதல் சம்பியன் ஆவார். எனவே இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேசத்திலும் பலபோட்டிகளில் கலந்துகொண்டு இந்நாட்டுக்கு பெருமை சேர்த்துத் தந்ததை நாம் மறந்துவிடலாகாது.
தனது வாழ்க்கையை மார்க்கத்துக்காக அர்ப்பணித்து பள்ளிவாயல்களுடன் மிகநெருங்கிய தொடர்புவைத்து வந்த எம்.வை.எம் யாஸீன் அவர்கள் தன்குடும்பமே தனக்காக நோன்பு நோற்றிருந்த நிலையில் 23ம் திகதி வியாழன் காலைவேளை சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அன்று மாலையே அவரின் ஜனாசா தன் மகனால் தொழுவிக்கப்பட்டு ஊர் பள்ளிவாயிலில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தன் குடும்பத்தில் தொடர் மரணங்கள் வந்து தாக்கிக் கொண்டிருந்த நேரமதில் இவரின் மரணச்செய்தி குடும்பத்தையே மீண்டும் கதிகலங்கச்செய்தமை உண்மையில் வருத்தமளிக்கின்றது.
இருந்தும் அல்லாஹ்வின் கத்ரினை ஏற்றவர்களாக அவர்களின் குடும்பத்திற்கு பொறுமையையும் நல்ஆரோக்கியத்தையும் வழங்க பிரார்த்திப்போம்.
(பின்த் அமீன்)