மட்டக்களப்பில் இஞ்சி, உழுந்து, பயறு, ஆடு வளர்ப்பிற்காக ரூ.66 மில்லியன் நிதி ஒதுக்கீடு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இஞ்சி, உழுந்து, பயறு மற்றும் ஆடு வளர்ப்பிற்காக பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேமம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் 46 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சரினால் இம்மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினைக் கொண்டு இம்மாவட்டத்தில் மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் இன்று (01) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமிருந்து தெரிவு செய்யப்படும் பொருத்தமான பயனாளிகள் இதன் மூலம் நன்மைபெறவுள்ளனர். இத்திட்டத்தினை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பிரதேச செயலாளர்கள், விவசாயத் விரிவாக்கள் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், கால்நடை வளர்ப்பு திணைக்கள உயர் அதிகாரிகள், திட்டமிடல் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி இத்திட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வைத்தார்.
இதன்போது இரஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கருத்து வெளியிடுகையில் மனைசார் கால்நடை வளர்பிற்கான ஆடுகளை பொருத்தமான பயனாளிகளுக்கு வழங்கி வைப்பதற்காக 20 மில்லியன் ரூபாவும், உழுந்து பயிர்ச் செய்கைக்காக 15 மில்லியன் ரூபாவும், பாசிப்பயறு செய்கைக்காக 16 மில்லியன் ரூபாவும், இஞ்சி செய்கைக்காக 15 மில்லியன் ரூபாவுமாக மொத்தம் 66 மில்லியன் ரூபா முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இத்திட்டமானது இவ்வருடத்திற்குரியதும், இவ்வாண்டு இறுதிக்குள் இவை வெற்றிகரமாக நிறைவு செய்யப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.