இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் (Right to Information Commission of Sri Lanka) காணப்படும் வெற்றிடங்களுக்கான சிபாரிசுகளைக் கோருவதற்கு பாராளுமன்றப் பேரவை இணக்கம்
இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பதவியில் தற்பொழுது காணப்படும் வெற்றிடம் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெற்றிடங்களுக்கு சிபாரிசுகளைக் கோருவற்கு பாராளுமன்றப் பேரவை தீர்மானித்திருப்பதாக பராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.
இதற்கமைய சட்டத்தரணிகள் சங்கம், பதிப்பாளர்கள் சங்கம், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், ஏனைய சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்து சிபாரிசுகளைக் கோருவதற்கு பாராளுமன்றப் பேரவை தீர்மானித்திருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அண்மையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஒன்லைன் முறையில் நடைபெற்ற பாராளுமன்றப் பேரவைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிபாரிசுகளைக் கோருவது தொடர்பில் வாராந்த மற்றும் நாளாந்த பத்திரிகைகளில் மும்மொழிகளிலும் விளம்பரங்களைப் பிரசுரிப்பதற்கும், சிபாரிசுகளை மேற்கொள்ள இரண்டு வார கால அவசாகத்தை வழங்குவதற்கும் பாராளுமன்றப் பேரவையில் தீர்மானிக்கப்பட்டது.