இலங்கையில் அம்பாறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான சில பகுதிகளில் (02) சிலந்தி வலையை ஒத்த பொருள் வானிலிருந்து வீழ்ந்திருந்ததுடன் ஹம்பாந்தோட்டை – சூரியவெவ, வல்சப்புகல, நபடகஸ்வெவ உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த வலை காட்சியளித்தது.
மஹியங்கனை நகரை அண்மித்த பகுதியிலும் இத்தகைய பொருள் வீழ்ந்திருந்தது. இது தொடர்பாக விமானப் படையின் ஊடகப்பேச்சாளர், குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்கவிடம் வினவிய போது, விமானங்களின் செயற்பாடுகள் காரணமாக அவை வானிலிருந்து விழவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன பின்வருமாறு தெரிவித்தார்,
‘இது இயற்கையானது. இந்த காலப் பகுதியில் சிலந்திகள் அதிகளவில் முட்டைகளை இடுகின்றன. அதிலிருந்து ஆயிரக்கணக்கான சிலந்திகள் வௌிவருகின்றன. அந்த சிலந்திகள் உணவை தேடி செல்லும்போது வயிற்றில் இருந்து நூலை போன்ற ஒன்றை வௌியிடுகின்றன. பறக்கும் அந்த நூலில் அவை தொற்றி பயணிக்கின்றன. இது எமக்கு மாத்திரம் உரித்தானது அல்ல. பல நாடுகளில் இந்த விடயம் நிகழ்கின்றது. மேற்கு நாடுகளில் Angel Hair என இதனை கூறுகின்றனர்.’