‘பென்டோரா பத்திரிகை’ வெளிப்படுத்தியுள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு, அது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்துக்குள் சமர்ப்பிக்குமாறு, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (06) உத்தரவிட்டார்.
அதிகப்படியான நிதி வைப்புகளை மேற்கொண்டுள்ளவர்களின் பெயர்ப் பட்டியலில் இலங்கைப் பிரஜை அல்லது பிரஜைகளின் பெயர்கள் உள்ளடங்குவதாக மேற்படி பத்திரிகையின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு, ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்தத் தகவல்கள் தொடர்பில், இன்று (06) முதல் ஒரு மாதக் காலப்பகுதிக்குள் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்று, ஜனாதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில், ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீர அவர்களால், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்கு, ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின் பேரில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.