இலங்கையில் 2022ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை நவம்பர் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (07) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.
நிதி அமைச்சரினால் 2022ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு (வரவுசெலவுத்திட்ட உரை) நவம்பர் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை முன்வைப்பதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அதனையடுத்து சனிக்கிழமை உள்ளடங்கலாக நவம்பர் 13ஆம் திகதி சனிக்கிழமை முதல் நவம்பர் 22ஆம் திகதி திங்கட்கிழமை வரை 07 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை நடத்துவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் நவம்பர் 22ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
ர் நவம்பர் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளதோடு, சனிக்கிழமைகள் உள்ளடங்கலாக டிசம்பர் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை 16 நாட்கள் அவ்விவாதத்தை நடத்த இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து டிசம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத்திட்ட விவாத காலப்பகுதியில் பாராளுமன்றம் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10.00 மணிரை 30 நிமிடங்கள் ஐந்து வாய்மொழிமூல விடைக்கான வினாக்களுக்கான நேரம் ஒதுக்கப்படவுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் மற்றும் குழுநிலை விவாதம் முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 5.00 மணிவரை இடம்பெறவிருப்பதுடன், பிற்பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை மதியபோசன இடைவேளைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வாக்கெடுப்பு இடம்பெறும் நம்பவர் 22ஆம் திகதி மற்றும் டிசம்பர் 10ஆம் திகதி தவிர்ந்த விவாதம் நடைபெறும் ஏனைய தினங்களில் பிற்பகல் 5.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதமும் இடம்பெறவுள்ளது.