இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக, மூன்று பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் (DIG) சிரேஷ்ட பெண் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக (WSSP) பணியாற்றிய, நிஷாந்தி செனவிரத்ன, ரேணுகா ஜயசுந்தர, பத்மினி வீரசூரிய ஆகியோர் நியமிக்கப்பட்டு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
அரச சேவைகள் ஆணைக்குழு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியின் அடிப்படையில் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சேவையின் அவசியத்தின் அடிப்படையில் இடமாற்றமும் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
நிஷாந்தி செனவிரத்ன அரச புலாய்வுச் சேவை பிரிவிலிருந்து, ஆராய்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு DIG ஆக இடமாற்றப்பட்டுள்ளார்.
ரேணுகா ஜயசுந்தர, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவிலிருந்து சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு DIG ஆக இடமாற்றப்பட்டுள்ளார்.
லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணையத்தின் இயக்குனராக பணியாற்றிய பத்மினி வீரசூரிய, காவல் நலப் பிரிவுக்குப் பொறுப்பான துணை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர், பிம்ஷானி ஜாசிங்காராச்சி இலங்கையின் முதலாவது பெண் பிரதிப் பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கமைய, இலங்கையில் தற்போது 4 பெண் பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் சேவையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.