ரஷ்யா, தலிபானுக்கு ஆப்கானிஸ்தான் தொடர்பான சர்வதேச கூட்டத்திற்கு அழைப்பு
ஆப்கானிஸ்தான் தொடர்பாக அக்டோபர் 20ஆம் தேதி நடக்கும் சர்வதேசக் கூட்டத்தில் பங்கேற்கத் தலிபான்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுக்கவுள்ளது.
இது குறித்து ரஷ்ய ஊடகங்கள் தரப்பில், “ஆப்கானிஸ்தான் தொடர்பாக மாஸ்கோவில் அக்டோபர் 20 மாதம் ரஷ்ய அதிபர் புதின் தலைமையில் சர்வதேசக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள தலிபான்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுக்கவுள்ளது” என்று செய்தி வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, தஜிகிஸ்தானில் ரஷ்யா ராணுவப் பயிற்சிகளை நடத்தியதுடன், அங்குள்ள ராணுவத் தளத்தில் அதன் ஆயுதங்களையும் பலப்படுத்தியுள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் வியாழக்கிழமை தஜிகிஸ்தான் குடியரசுத் தலைவரான எமோமாலி ரக்மோனுடன் தொலைபேசியில் பேசினார். இரு தலைவர்களும் ஆப்கானிஸ்தானின் சமீபத்திய முன்னேற்றங்களைச் சுற்றியுள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விவாதித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் தலிபான்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.(இந்து)