crossorigin="anonymous">
உள்நாடுவணிகம்

வில்வம் பழ யோகட் வியாபார உரிமம் முல்லை பால் பொருள் உற்பத்தி நிறுவனத்திடம் கையளிப்பு

புதுக்குடியிருப்பு மண்ணுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் உருவாக்கப்பட்ட வில்வம் பழத்தின் குணநலன்களை கொண்ட யோகட் பானத்திற்கான உற்பத்தி உரிமத்தினை உடையார்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள முல்லை பால் பொருள் உற்பத்தி நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் உருவாக்கப்பட்ட வில்வம் பழத்தின் குணநலனைக் கொண்ட யோகட் பானத்துக்கான உற்பத்தி உரிமம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (09) யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

வில்வம் பழ யோகட் பானத்தின் கண்டுபிடிப்பாளர் உரிமத்தைக் கொண்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சார்பில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவும், உற்பத்தி உரிமத்தைப் பெற்றுக்கொண்ட முல்லை பால் பொருள் உற்பத்தி நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் சி.தவசீலனும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது யாழ் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி கலாநிதி சீ.வசந்தருபா, பயிரியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும், தொழில் நுட்ப பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் திருமதி சி. சிவச்சந்திரன், வணிக இணைப்பு அலகின் (University Business Linkage Cell of University of Jaffna – ‘UBL JAFFNA) பணிப்பாளர் கலாநிதி த.ஈஸ்வரமோகன், பல்கலைக் கழக நிதியாளர் கே. சுரேஸ்குமார், முல்லை பால் உற்பத்தி நிறுவன ஆலோசனை சபை உறுப்பினர் பேராசிரியர் எஸ். கணேஷ்ராஜா, யோகட்பான கண்டுபிடிப்பாளர் சே.ஆனந்த்குமார் மற்றும் அவரது குழுவினரும் கலந்து கொண்டனர்.

குறித்த யோகட் பானத்தை இயற்கையான வில்வம் பழ பாணியில் இருந்து முல்லைத்தீவில் அமைந்துள்ள முல்லை பால் பொருள் உற்பத்தி நிறுவனம் வர்த்தக ரீதியில் தயாரிக்க உள்ளது.

இப் பானம் வயிற்றுப் புண் மற்றும் நீரிழிவு நோயை குறைக்க உதவுவதுடன் புற்றுநோய், கிருமி தாக்கம், மூட்டுவலி மற்றும் பல நோய்களுக்கான தீர்வைக் கொண்டுள்ளது. மேலும் இக் கூட்டு முயற்சியானது உள்ளூர் உற்பத்திகளையும், உற்பத்தியாளர்களையும் ஊக்குவிப்பதற்கான ஒரு முன்னெடுப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 26 + = 30

Back to top button
error: