ரஷ்யாவுக்கான இலங்கையின் நியமனம் செய்யப்பட்ட புதிய தூதுவரான பேராசிரியர் ஜனித அபேவிக்ரம லியனகே, நேற்று 2021 அக்டோபர் 08 திகதி தூதரகத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்வொன்றில் ரஷ்யாவுக்கான புதிய இலங்கை தூதுவராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
தூதரக ஊழியர்களால் அன்புடன் வரவேற்கப்பட்ட நியமனம் செய்யப்பட்ட புதிய தூதுவர், கௌதம புத்தரிடம் பிரார்த்தனைகளில் ஈடுபட்டதுடன், பாரம்பரிய எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்தார். புதிய தூதுவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டபோது, ரஷ்யாவில் உள்ள ருட்ன் பல்கலைக்கழகத்தில் முதுகலைக் கற்கையை மேற்கொள்ளும் வணக்கத்திற்குரிய சூரியவௌ ஞானதாசி தேரர் பிரித் நிகழ்வை முன்னெடுத்து, ஆசிகளை வழங்கினார்.
தூதரக ஊழியர்களுக்கு மத்தியில் உரையாற்றிய பேராசிரியர் லியனகே, ‘நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான செழிப்பான பார்வை’ என்ற கொள்கைக் கட்டமைப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட தொலைநோக்கை உணரும் முகமாக, பொருளாதார செழிப்பை அடைந்து கொள்வதற்கும் மற்றும் இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நட்புறவை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்வதற்கும் அர்ப்பணிப்புடன் ஒரே அணியாகப் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
2021 அக்டோபர் 05ஆந் திகதி ரஷ்யக் கூட்டமைப்பின் அரச நெறிமுறைத் திணைக்களத்தின் பணிப்பாளரைச் சந்தித்த நியமனம் செய்யப்பட்ட தூதுவர், ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக அவர் நியமனம் செய்யப்பட்டமைக்கான முறையான கடிதங்களின் திறந்த பிரதிகளைக் கையளித்தார்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற உரையாடலின் போது, இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவுகளைக் குறிப்பிட்ட தூதுவர் லியனகே, இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பர நலன் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் பலதரப்பட்ட ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றுவதற்கான திட்டங்கள் குறித்து தெரிவித்தார். தனது பிரதிபலிப்பில், தூதுவர் லியனகே ரஷ்யாவில் வெற்றிகரமான பதவிக்காலத்தைத் தொடர்வதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பணிப்பாளர் போக்தாஷேவ், அவரது கடமைகளை நிறைவேற்றுவதற்காக அவருக்கு முழுமையான ஆதரவை அளிப்பதாக உறுதியளித்தார்.
அனுபவமிக்க கல்வியியலாளரான தூதுவர் பேராசிரியர் ஜனித அபேவிக்ரம லியனகே, ரஷ்யாவிற்குப் புறப்படுவதற்கு முன்னர் கம்பஹா விக்கிரமாராச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.