crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்

இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (24) நடைபெற்றதுடன் இதன்போது எடுக்கப்படட முடிவுகள்

01. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் தென் கொரியாவின் கொரிய தேசிய திறந்த பல்கலைக்கழகத்திற்கும் (Korea National Open University) இடையே புரிந்துணர்வுஉடன்படிக்கையை மேற்கொள்ளல்

திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி, இயலளவு விருத்தி, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பம், ஆய்வுகூட வசதிகளைப் பயன்படுத்தல், ஆய்வு வெளியீடுகள் மற்றும் ஊழியர்கள் பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் தென்கொரியாவின் கொரிய தேசிய திறந்த பல்கலைக்கழகத்திற்கும் (Korea National Open University) இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. முல்லேரியாவில் அமைந்துள்ள கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் முழுமையான குருதிக் கூழ்மப்பிரிப்பு அலகு மற்றும் தொற்றல்லா நோய்களை (NCD) கண்டறியும் வசதிகளுடன் கூடிய நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) சிகிச்சைப் பிரிவை நிறுவுதல்

முல்லேரியாவில் அமைந்துள்ள கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை கொழும்பு மாவட்டத்தில் அதிகமான மக்களுக்கு இரண்டாம்நிலை சுகாதார வசதிகளை வழங்கி வருவதுடன், மருத்துவ சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, மகப்பேற்று மற்றும் குழந்தைகள் சிகிச்சை போன்ற அனைத்து விசேட நிபுணத்துவ மருத்துவ சேவைகளும் குறித்த மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோல் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கருத்திட்டங்களின் கீழ் குறித்த மருத்துவமனையில் தேசிய பக்கவாத சிகிச்சை நிலையம், இரண்டாம் நிலையிலுள்ள திடீர் விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு (ICU) புதிய மகப்பேற்று தீவிர சிகிச்சைப் பிரிவு (NICU) மற்றும் சிகிச்சை மேம்பாட்டு நிலையம் (Simulation Centre) போன்ற அலகுகள் புதிதாக நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நாளொன்றுக்கு 20 நோயாளிகளுக்கு வசதியளிக்கக் கூடியவாறு 12 குருதி கூழ்மப்பிரிப்பு இயந்திரங்கள் மற்றும் தேவையான அறுவைச் சிகிச்சை உபகரணங்களுடன் கூடிய முழுமையான குருதிக் கூழ்மப்பிரிப்பு அலகு மற்றும் தொற்றா நோய்களை (NCD) கண்டறியும் வசதிகளுடன் கூடிய நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) சிகிச்சைப் பிரிவு, சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 C1 வழங்கும் அன்பளிப்பைப் பயன்படுத்தி குறித்த மருத்துவமனையில் நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சுக்கும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்ட 306 C1 இற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. 1961 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனச் சட்டத்தை திருத்தம் செய்தல்

தற்போது நடைமுறையிலுள்ள 1961 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனச் சட்டத்தின் சில ஏற்பாடுகள் சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமாக இல்லாதமையால், அதன்படி அடையாளங் காணப்பட்டுள்ள திருத்தங்களை உள்வாங்கி குறித்த சட்டத்தை திருத்தம் செய்வதற்கும், அதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

இறக்குமதி செய்யப்படும் நடமாடும் வேலைத்தள ஊர்தியை இரட்டைப் பயன்பாட்டு வாகனமாகப் பதிவு செய்யப்படுவதன் மூலம் ஒருசில வாகன இறக்குமதியாளர்கள் விசேட நன்மைகளைப் பெறுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அது தொடர்பாக அரச கணக்குகள் செயற்குழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, இரட்டைப் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் நடமாடும் வேலைத்தள வாகனங்களுக்கு சமமான இறக்குமதி வரியை அறவிடுவதற்கும் சமமான ஆயுட்காலத்தின் அடிப்படையில் இறக்குமதிக்கு அனுமதியளிப்பதற்காகவும் புதிய வகைப்படுத்தல் குறியீட்டை (HS Code) அறிமுகப்படுத்துவதற்கான ஒழுங்குவிதிகள் 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் பிரகாரம் 2020 ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளின் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. அத்துருகிரிய இடைமாறல் மற்றும் புதிய களனிப் பாலத்தையும் தொடர்புபடுத்தி தூண்களிலான அதிவேக நெடுஞ்சாலைக் கட்டுமானம்

அத்துருகிரிய இடைமாறல் மற்றும் புதிய களனிப் பாலத்தையும் தொடர்புபடுத்தி தூண்களிலான அதிவேக நெடுஞ்சாலையை, நிர்மாணித்து பராமரித்து ஒப்படைத்தல் (BOT) முறைமையின் அடிப்படையில் மேற்கொள்வதற்காக 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முதலீட்டுக் கருத்திட்டத்திற்காக குறித்த முதலீட்டாளர்களின் தொழிநுட்ப மற்றும் நிதி யோசனைகள் அடங்கிய போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சைனா ஹாபர் இன்ஜினியரிங்க் கோபரேஷன் கம்பனிக்கு வழங்குவதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. கொவிட்19 தொற்று நோயாளர்களுக்கான சிகிச்சைகளை துரிதப்படுத்தல்

கொவிட் மூன்றாம் அலையின் கீழ் அடையாளங் காணப்படும் பெரும்பாலான நோயாளர்களில் மோசமான நிலைமையை அடையும் நோயாளர்களுக்கு ஒட்சிசன் விநியோகத்துடன் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும். அதற்கமைய, மோசமடைந்த நிலைமையை அடையும் நோயாளர்களுக்கு ஒட்சிசன் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் கீழ்க்காணும் படிமுறைகளைத் துரிதமாக மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• நாடளாவிய ரீதியில் மாகாண மட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ள 25 மருத்துவமனைகளில் மோசமடைந்த நிலைமையை அடையும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் Wall Oxygen உபகரணங்களுடன் கூடிய விசேட உயர் சிகிச்சைப் பிரிவை (High Dependency Units) நிறுவுதல்

• மருத்துவமனைகளுக்குத் தேவையான ஒட்சிசன் விநியோகத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அடையாளங் காணப்பட்ட தொலை பிரதேசங்களில் அமைந்துள்ள 15 மருத்துவமனைகளில் ஒட்சிசன் உற்பத்தி இயந்திரங்களைத் தாபித்தல்

• ஒரு மாவட்டத்திற்காக 100 நடமாடும் மருத்துவ ஒட்சிசன் உற்பத்தி இயந்திரங்கள் வீதம் 25 மாவட்டங்களுக்கு 2500 இயந்திரங்களை வழங்குவதன் மூலம் மருத்துவமனைகளில் சிலின்டர்களில் ஒட்சிசன் வழங்கும் தேவையைக் குறைத்தல்

• மருத்துவ ஒட்சிசனுக்கு அதிகரிக்கும் கேள்விக்கான விநியோகத்திற்காக மாதாந்தம் 120,000 லீற்றர்கள் திரவ ஒட்சிசனை இறக்குமதி செய்து போதுமானளவு இருப்பை நாட்டில் பேணுதல்

07. Sinopharm மற்றும் Oxford – AstraZeneca தடுப்பூசிகள் கொள்வனவு செய்தல்

கொவிட் 19 தொற்றை தடுப்பதற்காக தடுப்பூசி ஏற்றுவதே தீர்வு எனும் நிலைமையின் கீழ், மிகவும் விரைவாக தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டியுள்ளது. இவ்வருடத்தின் இறுதியில் மொத்த சனத்தொகையில் 60% – 70% வீதமானவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, துரிதமாக 14 மில்லியன்கள் Sinopharm தடுப்பூசிகளை சினாவின் குறித்த உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்கும், 01 மில்லியன் Oxford – AstraZeneca தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + 1 =

Back to top button
error: