பாகிஸ்தான் அணு ஆயுதத்தின் தந்தை என போற்றப்பட்ட அப்துல் காதிர் கான் காலமானார்
இந்தியாவில் பிறந்து, பாகிஸ்தானுக்கு குடிபெயரந்து அந்நாட்டின் அணு ஆயுதத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட அப்துல் காதிர் கான் உடல்நலக்குறைவால் நேற்று (11) காலமானார்.அவருக்கு வயது 85.
பிரிக்கப்படாத பாரத தேசத்தில் மத்தியப் பிரதேசம் தலைநகர் போபால் நகரில் கடந்த 1936ம் ஆண்டு பிறந்தவர் ஏ.கியூ.கான். அதன்பின் 1947ம் ஆண்டு பாகிஸ்தான் பிரிவினையின்போது, கான் குடும்பத்தினர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர்.
பாகிஸ்தானுக்கு முதன்முதலில் அணுஆயுதம் தயாரி்த்துக் கொடுத்து வல்லமை சேர்த்த அணுஆராய்ச்சி வல்லுநரான கான், பல்வேறு காரணங்களால் கடந்த 2004ம் ஆண்டு முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
உடல்நலக்குறைவு மற்றும் திடீர் மூச்சு திணறால் அவதிப்பட்ட ஏ.கியூ.கான் நேற்று அதிகாலை கான் ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை 7மணிக்கு காலமானார்.
மருத்துவமனை தரப்பில் கூறுகையில் “ கானின் நுரையீரலில் ரத்தப் போக்கு ஏற்படத் தொடங்கியபின் அவரின் உடல்நிலை படிப்படியாக மோசமடையத் தொடங்கியது” எனத் தெரிவித்தனர்.
ஏ.கியூ.கான் மறைவு குறித்து பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “ டாக்டர் அப்துல் காதிர் கான் மறைவுசெய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். தனிப்பட்ட முறையில் கடந்த 1982்ம் ஆண்டு முதல் எனக்குஅவரைத் தெரியும். தேசத்துக்கான அணு ஆயுதத் திட்டத்தை உருவாக்க உதவியவர், அவரின் சேவையை இந்ததேசம் மறக்காது” எனத் தெரிவித்தார்.
பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், “ டாக்டர் அப்துல் காதிர் கான் மறைவு செய்திகேட்டு மிகவும் துன்பப்பட்டேன். தேசத்துக்கு அணு ஆயுதத்தை வடிவமைத்த கானின் சேவை தேசத்தால் விரும்பப்பட்டது, தேசமும் அவரை நேசித்தது. அணுஆயுதத்தைவிட பெரிய ஆக்ரோஷமான அண்டை நாட்டினரிடம் இருந்து பாதுகாக்க கானின் சேவை உதவியது. பாகிஸ்தான் மக்களுக்கு அப்துல் காதிர் கான் மிகப்பெரிய அடையாளம்” எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணு ஆயுதத்தின் தந்தையாக அப்துல் காதிர்கான் போற்றப்படுகிறார், ஹீரோவாக மக்களால் கருதப்படுகிறார். முஸ்லிம் உலகில் முதன்முதலில் ஆணு ஆயுதத்தை தயாரித்த பெருமையும் இவரையே சேரும்.(இந்து)