தடுப்பூசி போடாததால் பிரேசில் அதிபருக்கு கால்பந்து போட்டி பார்க்க அனுமதி மறுப்பு
கால்பந்து போட்டியை பார்க்க சென்ற பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பிரேசில் அதிபராக ஜெய்ர் போல்சனாரோ பதவி ஏற்றது முதலே, ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
கரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல், முகக்கவசம் அணியாமல், மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஏற்கெனவே கூறிவந்தார். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
மேலும், கரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக் கொண்டால் நீங்கள் முதலையாகவும் மாறலாம், பெண்களுக்கு தாடி வளரலாம் போன்ற கருத்துகளைப் பொதுவெளியில் பயன்படுத்தி வந்தார்.
உலக அளவில் கரோனா பலி எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் கரோனா காரணமாக பிரேசிலில் வறுமை அதிகரித்து வருகிறது. அந்த நாட்டில் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் ஜெய்ர் போல்சனாரோ பிரேசிலின் சா பாலோ நகரில் குடும்பத்தோடு விடுமுறையைக் கொண்டாடி வருகிறார். அங்கு நடந்த உள்நாட்டு அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக அங்குள்ள மைதானத்துக்குச் சென்றார்.
ஆனால், மைதானத்தில் இருந்த அதிகாரிகள் அவரை மைதானத்துக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். அதிபர் ஜெய்ர் போல்சனரோ கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் அங்கிருந்து கோபத்துடன் புறப்பட்டுச் சென்றார். பின்னர் இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘நான் கால்பந்து விளையாட்டை பார்க்க விரும்பினேன். அதற்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று சொன்னார்கள். கால்பந்து பார்க்க தடுப்பூசி சான்றிதழ் ஏன் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை விட எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது’’ என்றார்.(இந்து)