இலங்கை கம்பஹா கல்பொத்த சந்தியில், 7 போலி நாணயத் தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேக நபர்கள் கம்பஹா பிரதேச குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினர் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டதாகக்கூறப்படும் இரண்டு போலி அடையாள அட்டைகள் அவர்களிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, அவர்கள் தற்காலிகமாக தங்கியிருந்த சீதுவ அம்பலன்முள்ள பகுதியிலுள்ள தங்குமிடமொன்றிலிருந்து மேலும் பல கள்ள நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட நாணயத்தாள்களில் 5,000 ரூபா போலி நாணயத்தாள்கள் 4, 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் 133, 100 ரூபா போலி நாணயத்தாள்கள் 71 மற்றும் ரூபாய் 50 போலி நாணயத் தாள்கள் 747ம் அங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்