இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த கால யுத்த அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான சொத்திழப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்று (15) மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான சொத்திழப்பு கொடுப்பனவிற்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 27 பேருக்கும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 09 பேருக்கும் சொத்திழப்பு கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு பிரதேச செயலர் ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாம் கட்டத்தின் கீழ் 159 பொதுமக்களும், 24 அரச உத்தியோகத்தர்களும், 01 இறந்த மற்றும் காயமுற்ற பயனாளிகளுக்கான கொடுப்பனவுமாக மாவட்டத்தில் மொத்தமாக 184பேருக்கு சொத்திழப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலர் ரீதியாக கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 57 பொதுமக்கள் மற்றும் 13 அரச உத்தியோகத்தர்களும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 33 பொதுமக்கள் மற்றும் 06 அரச உத்தியோகத்தர்களும், 01 இறந்த மற்றும் காயமுற்ற பயனாளிகளுக்கான கொடுப்பனவும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 17 பொதுமக்கள் மற்றும் 01 அரச உத்தியோகத்தருக்கும்,
மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 29 பொதுமக்கள் மற்றும் 04 அரச உத்தியோகத்தர்களுக்கும் , துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 23 பொதுமக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சொத்திழப்பு கொடுப்பனவினை பெற்றுள்ளனர்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்கள், குறித்த பிரிவுகளின் கிராம சேவகர்கள்மற்றும் பயனாளிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.