இலங்கையில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக களுகங்கையை அண்டி வாழும் மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று களுத்துறை மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே அறிவுறுத்தியுள்ளார்.
திடீரென வெள்ளம் ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுக்கும் வகையில் கடற்படையினரும், இராணுவத்தினரும் புளத்சிங்கள பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவசர நிலைமைகளின்போது உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்க தயார் படுத்தப்பட்டுள்ளதாக களுத்துறை மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை பல ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துவருவது தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. களனி கங்கையில் கித்துள்கல பிரதேசத்திலும், களு கங்கையில் இரத்தினபுரி பிரதேசத்திலும், குடா கங்கையில் மில்லகந்த பிரதேசத்திலும் மகாவலிகங்கையில் நாவலப்பிட்டிய பிரதேசத்திலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் இந்த பகுதிகளில் உள்ள மக்களை அவதானத்துடன் செயல்பட திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ்.சி.சி சுகிரீஸ்வர தெரிவித்துள்ளார்.
மக்களின் தேவை கருதியே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதாகவும் பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவில்லை என்று கொவிட் 19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்..
மக்கள் தங்களின் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே ஒரு சில நாட்களுக்கு பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.