இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ( Sri Lanka-Canada Parliamentary Friendship Association) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவு செய்யப்பட்டார்.
நேற்றைய தினம் (22) நடைபெற்ற ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – கனடா பாராளுமன்ற சங்கத்தின் மறுசீரமைப்புக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.
இக் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றதுடன், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினோன் விசேட விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதயன கிரிந்திகொட செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், டயானா கமகே மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் பிரதித் தலைவர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான கீதா குமாரசிங்ஹ உதவிச் செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
பொதுநலவாயத்தில் பகிரப்பட்ட பங்கெடுப்பு, கொழும்புத் திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி உதவிகள் மற்றும் இதற்கு மேலதிகமாக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கனேடிய சமூகம் போன்றவற்றின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர நட்புறவு காணப்படுவதாக இங்கு உரையாற்றிய சபாநாயகர் தெரிவித்தார்.
இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராகத் தெரிவ செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தனது நன்றியுரையில், பல்லினங்களைக் கொண்ட இரு முன்னாள் காலனித்துவ நாடுகளும் சிறந்ததொரு நாளைக்காக ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.