இலங்கை மக்கள் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கலந்துரையாடல்
இலங்கை மக்கள் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் வழியனுமதி, மரங்களை வெட்டுதல் அல்லது வெட்டியகற்றுதல், நஷ்டயீட்டு கொடுப்பனவு மற்றும் நஷ்டயீட்டு நிர்ணயம் ஆகியன தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (02) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும் போது மின்மார்க்கங்களில் மரங்களை வெட்டுதலின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள், பொது இடங்களில் மின்மார்க்கங்களை கொண்டு செல்லும் போது அதற்கு தேவையான வழிகாட்டல்கள், வீதிகளை அகலிக்கும் போது வழங்க வேண்டிய நிவாரணங்கள் மற்றும் வழியனுமதி கோருதல் ஆகியன தொடர்பான முறையான சட்ட அனுமதிகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளதோடு, இவ் வழிகாட்டல்கள் உங்கள் பணிகளை இலகுவாக்கும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை மக்கள் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் நுகர்வோர் பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு.ரோஷான் வீரசூரிய வழியனுமதி, மரங்களை வெட்டுதல் அல்லது வெட்டி அகற்றுதல், நஷ்டயீட்டு கொடுப்பனவு மற்றும் நஷ்டயீட்டு நிர்ணயம் ஆகியன தொடர்பான வழிகாட்டல்கள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.