இந்த நாட்டில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி ஒற்றுமை இன்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நிராகரிப்பது என்பது சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முக்கிய தீர்மானங்களில் ஒன்றாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் பேசும் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்த்தர்களும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (2) யாழ்ப்பாணத்தில் நடத்திய கூட்டத்தில் இன்னும் சில முக்கிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்; செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா,
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் நாயகம் முன்னாள் நீதியரசரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஷ்வரன் சார்பில் பேராசிரியர் சிவநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.