குற்றப்புலனாய்வு திணைக்களம் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவை கைது செய்வதற்கு தாம் தயாராகவில்லையென இன்று (08) உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சட்டமா அதிபர் ஊடாக குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அருட்தந்தை சிறில் காமினி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த மாதம் 25ம் திகதி Zoom தொழிநுட்பம் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கருத்தொன்றை முன்வைத்திருந்தார்.
இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரச புலனாய்வு பிரிவின் பிரதான மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்தார்.
இந்த முறைப்பாட்டுக்கமைய வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு குற்றப் புலானாய்வு திணைக்களத்திற்கு வருகை தருமாறு அருட்தந்தைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அதற்கென அவர் ஒருவார கால அவகாசத்தை கோரியிருந்தார். இதற்கிடையில் தன்னை கைது செய்வதற்கு தயாராகி வருவதாக தெரிவித்து அடிப்படை உரிமை மனு ஒன்றை அருட்தந்தை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அருட்தந்தையை கைது செய்வதற்கு தாம் தயாராகவில்லையென குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிஷிடர் ஜெனரல் ரொஹாந்த அபேசூரிய நீதிமன்றில் தெரிவித்தார்.
விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இதுதொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் விசாரணைகளுக்கென குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலமொன்றை வழங்க தமது கட்சிக்காரர் தயாராகவுள்ளதாக அருட்தந்தை சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி ஹர்சகுலரத்ன தெரிவித்தார்.
அடிப்படை உரிமை மனு வழக்கு விசாரணைகள் ஏப்ரல் 4ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன