இந்தியா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய ஒன்றிய பயணிகள் அமெரிக்கா செல்ல அனுமதி
அமெரிக்காவில் 20 மாதங்களுக்குப் பிறகு கரோனா பயண கட்டுப் பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்தியா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அமெரிக்காவில் வசிக்கும் உறவினர்களை சந்திக்க முடியாமல் ஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் தவித்தனர். அமெரிக்காவின் சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக விமான சேவை நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தன.
தற்போது அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் சற்றுகுறைந்துள்ள நிலையில் 20 மாதங்களுக்குப் பிறகு நேற்று பயண கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக 3 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை முடிவை காண்பிக்க வேண்டும். கரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டுமே அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்படுவர்.
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு விமான பயணத்துக்கு ஒருநாள் முன்பாக கரோனா பரிசோதனை நடத்தப்படும். அமெரிக்க விமான சேவை நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவுக்கு விமான சேவையை இயக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் கரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். பயணிகளின் முகவரி உள்ளிட்ட விவரங்களை பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
பயண கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு கனடா, மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் சாலை மார்க்கமாக செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.(இந்து)