மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 26 சாரணர்களுக்கான ஜனாதிபதி விருது மற்றும் சின்னஞ்சூட்டும் நிகழ்வும் நேற்று சனிக்கிழமை (13) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதான ஆணையாளரும், பிரபல சட்டத்தரணியுமான ஜனபிரித் பெர்னாண்டோவும், கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு சாரணர் சங்கத்தின் தலைவரும்,
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான கே.கருணாகரனும், சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் மாவட்ட ஆணையாளர் வி.பிரதீபனும், மற்றும் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார்,உதவி மாவட்ட ஆணையாளர்கள், அதிபர்கள், மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி, இராணுவ அதிகாரி, குழு சாரணத் தலைவர்கள், பெற்றோர்கள், விருதுபெறும் மாணவர்கள், கலந்துகொண்டார்கள்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 2020ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட ஆண்கள் சாரணர்களும், பெண்கள் சாரணர்களுமாக மொத்தமாக 26 பேர் ஜனாதிபதி சாரண விருது பெற்றிருந்தார்கள். இவர்களுக்கான ஜனாதிபதி சாரண விருது அதிதிகளினால் அணிவிக்கப்பட்டது. இதன்போது பிரதம அதிதிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் ஞாபகார்த்த பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.