நோர்வேயில் கண்டறியப்பட்ட டெல்டா திரிபு AY.63 மற்ற வைரஸ்களை விட ஆபத்து
நார்வே நாட்டில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை டெல்டா திரிபு ஏஒய்.63 (AY.63) மற்ற வைரஸ்களைவிட ஆபத்தானது எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கரோனா வைரஸ் உலகை ஆட்கொண்டது. அன்று தொட்டு இன்று வரை கரோனா தனது உருவத்தை மாற்றி பல்வேறு திரிபுகளாக அச்சுறுத்திக் கொண்டுள்ளது. முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை உலக நாடுகள் சிக்கிக் கொண்டுள்ளன.
தடுப்பூசிகள் உயிரிழப்புகள் ஆபத்தைக் குறைத்தாலும் கூட உலகம் முழுவதுமாக கரோனாவிலிருந்து விடுபட்டுவிட்டதாக அறிவிக்க முடியாத சூழலே இன்னும் உள்ளது.
கரோனா இரண்டாம் அலையின்போது ‘ஆல்பா வைரஸ்’ (B.1.1.7.) இங்கிலாந்தில் வேகமெடுத்துப் பரவியது. ‘டெல்டா வைரஸ்’ (B.1.617.2) இந்தியாவில் தீவிரமடைந்தது. அதனைத் தொடர்ந்து புதிதாக ‘டெல்டா பிளஸ் வைரஸ்’ உருவானது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘டெல்டா வைர’ஸின் மரபணு வரிசையில் ‘K417N’ எனும் புதிய திரிபு (Mutation) ஏற்பட்டது. இந்த வேற்றுருவத்துக்கு ‘டெல்டா பிளஸ் வைரஸ்’ (B.1.617.2.1 அல்லது AY.1) எனப் பெயரிடப்பட்டது. இப்போது உலகம் முழுவதும் கரோனா டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ்களால் தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ரஷ்யாவில் அன்றாடம் 30,000க்கும் மேல் பதிவாகும் தொற்றுகளில் பெரும்பாலனவை டெல்டா, டெல்டா பிளஸால் ஏற்படுகிறது. சீனாவிலும் டெல்டா திரிபு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நார்வே நாட்டில் புதிய வகை டெல்டா திரிபு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஏஒய்.63 (AY.63) என்ற இந்த புதிய வகை திரிபு மற்ற எல்லாவற்றையும் விட ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. நார்வே நாட்டின் பொது சுகாதார மையம் (Norwegian Institute of Public Health) இதனைத் தெரிவித்துள்ளது.
முதன்முதலாக கடந்த ஜூன் மாதம் இந்த திரிபு நார்வேயில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின்னர் நார்வேயில் கரோனா வேகமாகப் பரவ இந்த திரிபே காரணமாக இருந்துள்ளது. நிபுணர்கள் இது மற்ற எல்லா டெல்டா திரிபுகளையும் விட ஆபத்தானது எனக் கூறுகின்றனர்.
அதே வேளையில் இந்தத் திரிபு தடுப்பூசி எதிர்ப்பாற்றால் உடையதா என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதனால் தேவையின்றி அச்சம் கொள்ள வேண்டாம் என்று நார்வே நாட்டின் பொது சுகாதார மையத்தின் மூத்த ஆய்வாளர்களில் ஒருவரான கரோலின் பிராக்ஸ்டாட் தெரிவித்துள்ளார்.(இந்து)