கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்துக்கள் தவிர்ப்பு குறித்து கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துக்களும் அதன் காரணமாக ஏற்படுகின்ற இறப்புக்களினை தவிர்ப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் விசேட கலந்துரையாடல் நேற்று (16) இடம்பெற்றிருந்தது.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் பயிற்சி மண்டபத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் ஊடாக பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் பெறப்பட்டதோடு அவற்றினை விரைந்து நடைமுறைப்படுத்தும் வகையில் அனைத்து துறையினரையும் உள்ளடக்கியதான குழு ஒன்றும் உருவாக்கப்பட்டதோடு வரும்நாட்களில் மேற்படி குழுவானது விபத்துக்களுக்கான காரணிகளை பகுப்பாய்வு செய்து மேற்கொள்ளவுள்ள தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் முடிவுகள் எட்டப்பட்டன.
இக் கலந்துரையாடலில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,மருத்துவ அதிகாரிகள், மாவட்ட பொலீஸ் அதிகாரிகள், வலயக் கல்வி பணிப்பாளர், மாவட்டச் செயலக அதிகாரிகள், மாவட்டச் செயலக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலீஸ் உத்தியோகத்தர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் பிரதேச சபையினர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டிருந்தனர்.