இலங்கையில் வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது மற்றும் வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்) [the Minimum Retirement Age of Workers Bill and the Termination of Employment of Workmen (Special Provisions) (Amendment) Bill.] ஆகிய இரு சட்டமூலங்களையும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (17) சான்றுரைப்படுத்தினார்.
இந்த இரு சட்டமூலங்களும் கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயது வரை அதிகரிப்பது இந்தச் சட்டமூலங்களின் நோக்கமாகும். இதுவரை தனியார் துறையில் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை.
பெரும்பாலும் தனியார்துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவது ஊழியர்களுக்கும் தொழில் வழங்குனருக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை அடிப்படையாக கொண்டே ஆகும்.
இதற்கமைய, 2021ஆம் ஆண்டு 28ஆம் இலக்க “வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது” மற்றும் 2021ஆம் ஆண்டு 29ஆம் இலக்க “வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்)” ஆகிய இரு சட்டங்களும் இன்று (17) முதல் நடைமுறைக்கு வருகின்றன.