இலங்கை திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு அறிவிக்காமல் நான்கு திட்டங்கள் நேரடி வெளிநாட்டு நிதியுதவிகள் செலவு செய்யப்பட்டமை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.
2017, 2018, 2019 நிதி ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக சுற்றாடல் துறை அமைச்சின் அதிகாரிகள் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டபோதே இது குறித்த தகவல்கள் வெளியாகின.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தலைமையில் நேற்று (19) கூடியது.
9.9 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மூன்று திட்டங்கள் மற்றும் 1.86 மில்லியன் யூரோ பெறுமதியான திட்டங்களே இவ்வாறு நேரடி நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக அறியப்பட்டிருந்தது. எனினும், இத்திட்டங்கள் குறித்து வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எதிர்வரும் காலத்தில் இவ்வாறான நிதியுதவிகள் கிடைக்கும்போதும் அவற்றை செலவு செய்யும்போதும் அதுபற்றி திறைசேரிக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோபா குழு, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியது.
அரசாங்க வைத்தியசாலைகளின் இரசாயனக் கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் சுற்றாடலுடன் கலப்பதினால் ஏற்படுகின்ற சுற்றாடல் மாசு தொடர்பில் கவனம் செலுத்துவது குறைந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் கோபா குழுவில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் உரிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இலத்திரனியல் கழிவுகளை முகாமைத்துவம் செய்வது ஒழுங்குபடுத்த வேண்டிய முறை, உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்துக்கு அரசாங்கம் கையகப்படுத்தியுள்ள காணிகளின் இழப்பீடுகள் தொடர்பான மேலதிக கொடுப்பனவுக்கான வட்டிகளைச் செலுத்துவது, கங்கைகளைப் பாதுகாப்போம் தேசிய சுற்றாடல் வேலைத்திட்டத்தின் தற்போதை நிலைமைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர்களான அசோக அபேசிங்க, நிரோஷன் பெரேரா, கலாநிதி ஹரிணி அமரசூரிய, வைத்திய கலாநிதி உபுல் கலப்பத்தி, மொஹமட் முஸம்மில் மற்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.