மட்டக்களப்பு மாவட்டத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (19) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களது தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் UNOPS நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சிவில் சமூக நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் திருமதி.சுரங்க மல்லவ, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் மற்றும் துறைசார் திணைக்களங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்ட UNOPS நிறுவனத்தின் அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
கலந்துரையாடலின் போது நீர், சுகாதாரம் மற்றும் வடிகான் கட்டமைப்பு, திண்மக்களிவகற்றல் மற்றும் வீதி அபிவிருத்தி உள்ளட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், மாவட்டத்தில் மிகவும் அதிக தேவைப்பாடுகள் இனங்காணப்பட்டுள்ள முன்னுரிமையளிக்க வேண்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளான வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளில் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது
இவை தொடர்பான திட்ட மதிப்பீட்டு அறிக்கைகள் எதிர்வரும் மாதத்திற்கு முன்னர் உரிய திணைக்களங்களினால் மேற்கொள்ளப்பட்டு UNOPS நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த நிறுவனமானது நிதி மூலங்களைப்பெற்று வெகு விரைவாக இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியுமென கலந்துரையாடப்பட்டது.