2022ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 153 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஆளும் கட்சியினர் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் இதற்கு எதிராக வாக்களித்தனர்.
இன்று மாலை 05.10 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெற்றது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களினால் 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு (வரவுசெலவுத்திட்ட உரை) நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முன்வைக்கப்பட்டது.
நவம்பர் 13 சனிக்கிழமை முதல் இன்று (22) வரை 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி. சில்வா இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை ஆரம்பித்துவைத்தார். நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று மாலை பதிலளித்து உரையாற்றினார்.
நாளை (23) முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகவுள்ளதுடன், சனிக்கிழமைகள் உள்ளடங்கலாக எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி வரை 16 நாட்கள் இந்த விவாதம் நடைபெறும்.
டிசம்பர் 10 ஆம் திகதி பிற்பகல் 05.00 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.