ரஷ்யாவின் பாதுகாப்புச் சபை செயலாளர் நிக்கொலாய் பட்ருஷெவ் (Nikolai Patrushev) அவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) சந்தித்தார்.
சோவியத் சோசலிச குடியரசின் அரச புலனாய்வுச் சேவை (KGB) மற்றும் ரஷ்ய ஃபெடரல் பாதுகாப்புச் சேவை ஆகியவற்றில் நீண்டகால அனுபவத்தைக் கொண்டுள்ள நிக்கொலாய் பட்ருஷெவ் அவர்கள், 2008ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் பாதுகாப்புச் சபை செயலாளராகப் பணியாற்றி வருகின்றார்,
இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான இருதரப்புத் தொடர்புகள், 2022 பெப்ரவரி 19அம் திகதியுடன் 65 ஆண்டுகள் பூர்த்தியை அடைகின்றன நிக்கொலாய் அவர்களின் இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகள் மேலும் பலப்படுத்தப்படுவதாக, ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
நிக்கொலாய் பட்ருஷெவ் அவர்கள் கொண்டுவந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ஸ்பூட்னிக் தடுப்பூசிகள் 5,000 மற்றும் கொவிட் தடுப்பூசியேற்றலை வெற்றிகொள்ள ரஷ்யா வழங்கிய ஒத்துழைப்பு, கொவிட் பரவலுக்கு மத்தியிலும் ரஷ்யப் பிரஜைகள் 49,379 பேர் கடந்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுலா வந்தமை போன்றவற்றுக்கு, ஜனாதிபதி அவர்கள் நன்றியைத் தெரிவித்தார்.
ரஷ்யாவின் ஜீஎஸ்பி (GSP) முறைமையின் கீழ் மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி உற்பத்திகளை விரிவுபடுத்த இலங்கை எதிர்பார்க்கின்றது. கொழும்புத் துறைமுக நகரம், மின்சக்தி, மருந்து உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், விவசாயத்துறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளைச் செய்வதற்கு, ரஷ்ய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் என்ற வகையில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் சமாதானம் மற்றும் பாதுகாப்புக்காக முன்னிவையாவது தொடர்பில் ரஷ்யாவுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்து ஜனாதிபதி அவர்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் பயங்கரவாத ஒழிப்புப் போரின் போது, ரஷ்யா பாரிய ஒத்துழைப்புகளை நல்கியுள்ளது. புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்கள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான பணப் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்தல் உள்ளிட்ட அடிப்படைவாத, பயங்கரவாத மற்றும் சைபர் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகளை மேலும் பலப்படுத்த இலங்கை தயாராக உள்ளதென்று, நிக்கொலாய் பட்ருஷெவ் அவர்களிடம் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி மட்டெரி (Yury Matery), ரஷ்யாவின் பாதுகாப்புச் சபை பிரதி செயலாளர்களான அலெக்சாண்டர் வெனெடிக்டொவ் (Aleksander Vertediktov), ஓலெக் கிராமொல் (Cleg Khramov), ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஐயநாத கொழம்பகே ஆகியோரும் ரஷ்யாவின் இராஜதந்திர அதிகாரிகள் சிலரும், கலந்துகொண்டிருந்தனர்.