கார் புகுந்து தாறுமாறாக ஓடியதில் பலர் மரணம். 20க்கும் மேற்பட்டோர் காயம்
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் எஸ்யுவி கார் ஒன்று புகுந்து தாறுமாறாக ஓடியதில் பலர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் விஸ்கான்ஸின் நகரில் ஞாயிற்றுக்கிழமை (21) உள்ளூர் நேரப்படி மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
விஸ்கான்ஸின் மாகாணத்தின் புறநகர்ப் பகுதியான மில்வூகீயில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.
ஞாயிறன்று நடைபெற்ற ஊர்வலத்தின் போது திடீரென சிவப்பு நிற எஸ்யுவி ரக கார் ஒன்று கூட்டத்திற்குள் புகுந்து தாறுமாறாக ஓடியது. இதில் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் நகரில் உள்ள 6 வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி காவல்துறை தலைவர் டான் தாம்ப்சன் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில், “திடீரென தாறுமாறாக ஓடிய வாகனம் 20க்கும் மேற்பட்டோர் மீது மோதியது. அதில் சிறுவர்களும் இருந்தனர். உடனடியாக உயிரிழப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை. 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 11 பேர் பெரியவர்கள், 12 பேர் குழந்தைகள். சம்பவத்தின் போது அந்த குறிப்பிட்ட வாகனத்தை நோக்கி அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு காரை நிறுத்தச் செய்தார். இந்த சம்பவத்தால், திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படாது. சாலைகள் மூடப்பட்டிருக்கும்.
இந்த சம்பவம் தொடர்பாக காரை ஓட்டிவந்தவரைப் பிடித்து விசாரித்து வருகின்றோம். காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு விஸ்கான்ஸின் மில்வூகீ பகுதிக்கு வேறு ஏதும் அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரியவில்லை ” என்றார்.
இச்சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு விவரிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தீவிரவாத சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார், உளவுப் பிரிவினர் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.(இந்து)