கொழும்பு – கொட்டாவ, பன்னிபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (25) அதிகாலை வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதுடன் சமையல் எரிவாயு கசிவு காரணமாக இவ்வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இடம்பெற்ற இவ்வெடிப்பு சம்பவத்தில் குறித்த வீட்டிற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் ஆயினும் வீட்டில் இருந்தவர்களுக்கு இதனால் எவ்வித தீங்கும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
‘அதிகாலை 4.00 மணியளவில் வெடிப்புச் சத்தமொன்று கேட்டதாகவும், இதனையடுத்து உடனே அறையிலிருந்து வெளியில் வராமலிருந்த பின்னர் அறையின் கதவைத் திறந்தபோது, சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்திருப்பது தெரிய வந்ததாக குறித்த வீட்டில் வசிக்கும் பெண் தெரிவிக்கின்றார்.
வீட்டின் கூரையின் ஒரு பகுதியும் உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவித்த அவர், தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென குறிப்பிட்டார்.’
இம்மாதத்தில் பதிவாகியுள்ள 4 ஆவது சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் இது என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நவம்பர் 04ஆம் திகதி வெலிகம, கப்பரதொட்ட பகுதியிலும், நவம்பர் 16ஆம் திகதி இரத்தினபுரியிலுள்ள உணவகம் ஒன்றிலும், நவம்பர் 20ஆம் திகதி பழைய குதிரைப்பந்தய கட்டத்தில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் பதிவாகியிருந்தது.
அண்மையில் விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் எரிவாயுவின் தரத்தில் பிரச்சினைகள் உள்ளதாக லிற்ரோ நிறுவன சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர். ஆயினும், லிற்ரோ கேஸ் நிறுவனம் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.