அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மனிதவளம் என்பன பகிர்ந்தளிக்கப்படும் முறை தொடர்பில் விரைவில் மதிப்பீட்டை மேற்கொண்டு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அண்மையில் (27) பணிப்புரை விடுத்தார்.
சில வைத்தியசாலைகளில் மருத்துவர்கள் மேலதிகமாக இருக்கும் நிலையில், சில கிராமிய வைத்தியசாலைகளில் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுகாதார அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆதார வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதன் ஊடாக சுகாதார நிலைமைகளை முன்னேற்றமான நிலைக்குக் கொண்டுவரக்கூடியதாக இருந்தாலும், மாகாண சபைகளின் கீழ் உள்ள விடயத்தை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவது 13வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய அதிகாரப் பரவலாக்கத்துடன் முரண்படுவதால் அதனை ஏற்றுக்கொள்வது சிக்கலுக்குரியது என அவர் இங்கு குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கௌரவ அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், சுகாதாரத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.