crossorigin="anonymous">
உள்நாடுபொது

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் நிரபராதி என கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு இன்று (02) எடுத்துக் கொள்ளப்பட்டபோது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜாவினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இனங்கள் அல்லது மதங்களின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், மக்கள் மத்தியில் கோபத்தை தூண்டும் வகையிலும் இதுபோன்ற கருத்துகளை பிரதிவாதி கூறியதாக முறைப்பாட்டாளர்களால் நிரூபிக்க தவறியமை காரணமாக, பிரதிவாதியாக நிரபராதியென விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த மார்ச் 09ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தின் ஊடாக, இனங்களுக்கு இடையில் பகைமையை தூண்டியதாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்தை மீறியதாகவும் தெரிவித்து, இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் அவர், கடந்த மார்ச் 16ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். இதேவேளை, அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸம்மில், நிமல் பியதிஸ்ஸ, ஜயனந்த வெல்லபட ஆகியோருக்கு எதிராக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அசாத் சாலி சார்பில் ஆஜரான சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, வழக்கின் முறைப்பாட்டாளர்களான மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் தனது கட்சிக்காரருக்கு எதிராக துவேசமான வகையில் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதாகவும், இதன் மூலம் குற்றவியல் வழக்கு சட்டத்தின் 17 (2) ஆவது சரத்தின் கீழ் இழப்பீட்டை அறிவிடும் உத்தரவை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

குறித்த முறைப்பாட்டை பெப்ரவரி 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிபதி அமல் ரணராஜா, இது தொடர்பில் குறித்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பாணை விடுக்குமாறு உத்தரவிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 5 =

Back to top button
error: