அனுராதபுர மாவட்டத்தில் நான்கு முஸ்லிம் பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரம் உயர்வு.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சௌபாக்கிய. வேலைத் திட்டத்தில் கீழ் இலங்கையில் ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கான பாடசாலை அபிவிருத்தி திட்டம் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
பின்தங்கிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்து பின்தங்கிய பிரதேசங்களில் இருக்கும் மாணவர்களுக்கும் தேசிய மட்டத்தில் வளங்களுடனான ஒரு சூழலை இந்தப் பிரதேச பாடசாலைகளில் ஏற்படுத்தி தரமான கல்வியை இந்த நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமனாக வழங்க வேண்டும் என்ற ஒரு உயர்தரமான குறிக்கோளை முன்வைத்தே இந்த புதிய திட்டம் தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் அனுராதபுரம் மாவட்டத்தில் கெக்கிராவ கல்வி வலயத்திற்கு உற்பட்ட கலாவெவ மத்திய கல்லூரி, கெபிதிகொள்ளாவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஹொரவ்பொத்தான பதியூதீன் மஹ்மூத் மஹா வித்தியாலயம், கலன்பிந்துனுவெவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் அனுராதபுர கல்வி வலயத்திற்கு உட்பட்ட இக்கிரிகொள்ளாவ அந்நூர் மஹா வித்தியாலயம் ஆகிய நான்கு தமிழ் மொழிமூல முஸ்லிம் பாடசாலைகள் தற்போதைய நிலைமையில் இந்தத் திட்டத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ளன.
இந்த பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்திற்கு அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து உள் வாங்குவதற்காக சகல விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கிய வடமத்திய மாகாணத்தின் ஆளுனர் கௌரவ மஹிபால ஹெரத், வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம் ரஞ்சித் சமரகோன், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், எச். நந்தசேன, அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன, வடமத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஆர்.ஏ ஹுஸைன், பி. சஹிது (ஆசிரியர்) அதேபோல் வடமத்திய மாகாண பிரதான செயலாளர், வடமத்திய மாகாண கல்வி பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கு மாவட்ட முஸ்லிம் சமூகம் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே அனுராதபுர மாவட்டத்தில் அனுராதபுர சாஹிரா தேசிய பாடசாலை மாத்திரமே தேசிய பாடசாலையாக இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.