பாகிஸ்தானில் சித்திரவதைக்குட்படுத்தி, எரியூட்டி கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் உடல், நேற்று மாலை யூஎல் 186 ஸ்ரீலங்கன் விமானம் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தின் செலவில், அன்னாரது உடல் பாகங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.பிரியந்த குமாரவின் உடலை பொறுப்பேற்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் மாத்திரமன்றி, பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.
இவ்வாறு கொண்டு வரப்பட்ட உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.பிரேத பரிசோதனைகளின் பின்னர், உடல் பாகங்களை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரியந்த குமார தியவடனவின் உடல், அவரது கனேமுல்ல பகுதியிலுள்ள வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.இவ்வாறான நிலையில், பிரியந்த குமார தியவடனவின் இறுதிக் கிரியைகளை, நாளை புதன்கிழமை (08) நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.(பிபிசி)