வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற இலங்கையர்கள், இலங்கைக்கு பணம் அனுப்பும்போது சட்ட ரீதின வழிமுறைககளில் பணம் அனுப்புமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்தலொன்றை விடுத்து வேண்டுகோள் விடுத்துள்ளது.
வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற சில இலங்கையர்கள், இலங்கைக்கு சட்டத்திற்குப் புறம்பான வழிகளுடாக பணத்தை அனுப்புகின்றமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு தகவல் கிடைத்துள்ளது.
அவ்வாறு பணம் அனுப்புகின்ற போது, சில தரகர்கள், வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்களின் வெளிநாட்டு நாணயத்தைச் சேகரித்து, அதற்குச் சமனான தொகையை இலங்கை ரூபாவில் ௮த்தகைய பணியாளர்களைச் சார்ந்துள்ளோரின் கணக்குகளுக்கு நிதியியல் முறைமையினூடாக பணமாக அல்லது பரிமாற்றல்களாக வரவுவைக்கின்ற நிகழ்வுகள் தொடர்பில் மத்திய வங்கிக்கு தெரியவந்துள்ளது.
அறிந்தோ, அறியாமலோ இத்தகைய சட்டரீதியற்ற நடவடிக்கைகளுக்குள் சிக்கிக்கொள்ள வேண்டாமென்று வெளிநாட்டில் வதிகின்ற அனைத்து இலங்கையர்களுக்கும் அதேபோன்ற அவர்களைச் சார்ந்திருப்போருக்கும் இலங்கை மத்திய வங்கி அறிவிக்கின்றது.
சட்டத்திற்குப் புறம்பான தொழிற்படுத்துநர்களால் பாதிக்கப்படவேண்டாம் என்றும் இலங்கைக்கு பணம் அனுப்புகின்ற போது இலங்கை மத்திய வங்கியால் மேற்பார்வை செய்யப்படுகின்ற வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்கள் அல்லது சர்வதேச வங்கிகள் அல்லது நிதியியல் நிறுவனங்களூடாக மாத்திரம் பணம் அனுப்புவதை உறுதிசெய்யுமாறும் இலங்கை மத்திய வங்கி தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்துகின்றது.