இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதால், நாட்டிலுள்ள வாகன விற்பனையாளர்கள் மாத்திரமன்றி, வாகன பயன்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் பரவலினால், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி வாகன இறக்குமதிக்கு தடை விதித்திருந்தது.
உள்நாட்டிலுள்ள டாலர், ஆடம்பர தேவைகளுக்காக வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையிலேயே இந்த தீர்மானத்தை எட்டியதாக நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.
இவ்வாறான நிலையில், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட வாகன இறக்குமதியானது, அடுத்த வருடம் இறுதி வரை தொடரும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்தார். நாடு என்ற விதத்தில் அந்நிய செலாவணி இல்லாமையானது, பாரிய பிரச்னையை தோற்று வித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
வெளிநாடுகளில் பணிப்புரியும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களால் கிடைக்கும் வருமானம் பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
வருடாந்தம் 2,30,000 வரையான புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிநாடுகளை நோக்கி பயணிக்கும் நிலைமை கடந்த காலங்களில் காணப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு 53,000 பேர் மாத்திரமே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக சென்றுள்ளனர். எனினும், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் இந்த ஆண்டு ஒரு லட்சத்தை தாண்டிய புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வருடமொன்றுக்கு 3 லட்சம் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே இலங்கை அரசாங்கத்தின் இலக்காக காணப்படுகின்றது. வெவ்வேறு வேலைகளுக்காக புலம்பெயர் தொழிலாளர்கள், வெளிநாடுகளுக்கு செல்லும் போது, நாட்டிற்கு அந்நிய செலாவணியை அதிகளவில் கொண்டு வர முடியும் என எதிர்பார்க்க முடிவதாக பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மா இறக்குமதியை நிறுத்துவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில், வாகனங்களை அடுத்த வருடம் இறுதி வரை எந்தவிதத்திலும் கொண்டு வர முடியாது என பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
இலங்கையின் தற்போதைய சொத்துக்கள் தொடர்பிலான தகவல் கடந்த நவம்பர் மாதம் வரை 1587 மில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டு நாணயத்திற்கான சொத்துக்களே காணப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ராஜாங்க அமைச்சர் ஷெஹென் சேமசிங்க, நாடாளுமன்றத்தில் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப் பெற செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இலங்கையின் வெளிநாட்டு கையிருப்புக்களை அதிகரித்து, சொத்துக்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ராஜாங்க அமைச்சர் கூறுகின்றார்.
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவின் இந்திய பயணமானது, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நோக்கத்தை கொண்டது என தெரிய வருகின்றது. நாட்டிற்கு தேவையான எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நிதியை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திடவுள்ளது.
நாட்டில் காணப்படுகின்ற நிதி நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதி தடைப்பட்டுள்ளதை தம்மால் புரிந்துக்கொள்ள முடிகின்றது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், வாகன இறக்குமதி தடைப்பட்டுள்ளமையினால், பாதிக்கப்பட்டுள்ள அந்த துறை சார்ந்தோருக்கு நிவாரணம் உள்ளிட்ட மாற்று திட்டங்களை அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்சிகே பிபிசிக்கு தெரிவித்தார்.
வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து, வாகனங்களின் விலை பலமடங்காக அதிகரித்துள்ளது. இலங்கையில் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து, 90 வீதமான வாகன விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.(பிபிசி)