பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு முதல் நபர் மரணம்
பிரிட்டனில் ஐந்தாம் கட்ட கொரோனா எச்சரிக்கை
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்ப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் 63 நாடுகளில் பரவிட்டது. டெல்டா வைரஸைவிட ஒமைக்ரான் வேகமாகப் பரவுகிறது. பிரிட்டனில் ஒமைக்ரான் பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை சுகாதார அதிகாரிகள் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
மூன்றாவது டோஸ் போடுவதை பிரிட்டன் முன்னெடுத்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே மூன்றாவது டோஸ் தடுப்பூசி என்ற இலக்கை பிரிட்டன் அரசு நிர்ணயித்துள்ளது. சனிக்கிழமை மட்டுமே 5,30,000 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதனிடையே நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். ‘‘யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஒமைக்ரான் பேரலை வந்து கொண்டிருக்கிறது. ஒமைக்ரான் வேகமாகப் பரவுகிறது. இந்த வைரஸ்கள் எப்படி பரவும் என்பது குறித்து நமக்கு முன் அனுபவம் இருக்கிறது.
ஆதலால் நாட்டில் ஐந்தாம் கட்ட கரோனா எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமை மட்டும் 1898 பேருக்கு ஒமைக்ரான் பரவியுள்ளது. பிரிட்டனில் இதுவரை மொத்தம் 3137 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஆகையால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்தநிலையில் பிரிட்டனில் ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பாதிப்பால் முதன்முறையாக மரணம் நிகழ்ந்துள்ளது. இதனை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜான்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘குறைந்தபட்சம் ஒரு நோயாளியாவது ஒமைக்ரானால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்படும்’’ எனக் கூறினார்.(இந்து)