ராஜிய உறவு உலகில் அண்மை காலமாக அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக ”சீன கடன் பொறி” காணப்படுகின்றது. ”சீனாவின் கடன் பொறியில்” இலங்கை சிக்கியுள்ளதாக பல காலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா, கடனை வழங்கி அந்நாடுகளின் பொருளாதார மையங்களை சீனா கையகப்படுத்துவதாக மேற்குலக நாடுகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.
இந்த குற்றச்சாட்டுக்களை கொழும்பிலுள்ள சீன தூதரகம் நிராகரித்து, மாறுப்பட்ட பதிலொன்றை வழங்கியது. ”மேற்குலக நாடுகளின் கடன் பொறியிலிருந்து” இலங்கையை சீனாவே காப்பாற்றி வருவதாக சீன தூதரகம் பதிலளித்தது.
இலங்கைக்கு மாத்திரமன்றி, ஆப்பிரிக்க வளையத்திலுள்ள சில நாடுகளின் துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் பலவற்றுக்கான கடனை சீனாவே வழங்கியுள்ளது.
”யுகாண்டாவை மூழ்கடித்த சீன கடன் பொறி, இலங்கையையும் மூழ்கடிக்கின்றது” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
”சீனாவினால் வழங்கப்பட்ட கடனை மீளச் செலுத்த முடியாமையினால், யுகாண்டாவிலுள்ள ஒரேயொரு சர்வதேச விமான நிலையம் தற்போது அவர்களுக்கு இல்லாது போயுள்ளதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டுக்குள் பிரவேசிக்கும் ஒரேயொரு மற்றும் பிரதான நுழைவுவாயில், வேறொரு நாட்டிற்கு உரித்தாகின்றமையானது, யுகாண்டா மக்களுக்கு எந்தளவிற்கு பிரச்சனையான அனுபவமாக இருக்கும்?” என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.
”ராஜபக்ஷ ஆட்சியை போன்றே, யுகாண்டாவின் ஊழல் மிகுந்த அரசியல் தலைமைகளின் முன்னுரிமைகள் மற்றும் தேசிய திட்டமொன்று இல்லாது கமிஷன்களை பெற்றுக்கொள்வதற்காக பேராசையுடன் சீனாவிடமிருந்து பெருமளவிலான தொகை கடனை பெற்றுக்கொண்ட திமிர்பிடித்த முடிவின் பெறும்பேறு இது” என அவரது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
”ராஜிய ரீதியிலான விவகார வரையறைகளுக்கான எல்லையிலிருந்து அப்பால் சென்று, வேறொரு நாட்டின் ”அரசியல் மற்றும் இராணுவ அபிலாஷைகளுக்காக” அந்த முகாமில் இணைவதன் ஊடாக, தமது சொந்த நாட்டின் இறையாண்மையை இழப்பதானது, நாட்டின் தேசிய அபிலாஷைகளை நேரடியாகவே அழிப்பதாகும்” என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக, நாட்டிற்கு தேவையற்ற திட்டமாக நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம், இந்து சமுத்திரத்தின் கடற்படை வழித்தடமாக சீனாவினால் கையகப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
”சீனாவின் கடற்படை தளமாகவே, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட QUAD நாடுகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அவதானித்து வருகின்றன. இது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய பிரச்சினை. முட்டாள் தனமான முடிவுகளின் விளைவாக, எதிர்வரும் 60 – 80 மாதங்களில் பிராந்தியத்தில் தவிர்க்க முடியாத அதிகார போராட்டத்தில் தவிர்க்க முடியாத விளைவுகளை அனுபவிப்போம்” என, பீல்ட் மார்ஷல் கூறுகின்றார்.
”உரம் ஏற்றிய கப்பல் விவகாரத்தில், சூடுபட்ட பன்றியை போல இலங்கையிலுள்ள சீன தூதரகம் போராடி வருகின்றது. இவ்வாறான சூழலில், எவ்வாறு நடந்துகொள்வது என்பது தற்போது எமக்கு மிகத் தெளிவாக தெரிகின்றது. எதிர்வரும் காலங்களில் இந்த விவகாரத்தை சரி செய்துக்கொள்ள வேண்டும்” என அவர் தனது பதில் தெரிவித்துள்ளார்.
சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த முடியாமையினால், யுகாண்டாவிலுள்ள ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம், அந்த நாட்டு அரசாங்கத்திடமிருந்து இல்லாது போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தன. யுகாண்டாவிடமிருந்து என்டபே சர்வதேச விமான நிலையம் இல்லாது போவதை தவிர்க்கும் வகையில், சீனாவுடன் 2015-ம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள யுகாண்டா முயற்சித்து வருவதாகவும் சில ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்டபே சர்வதேச விமான நிலையத்தை விஸ்தரிப்பதற்காக, சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து யுகாண்டா, $200 மில்லியன் கடனாக பெற்றதாகவும், அந்த கடன் நிபந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டாம் என, யுகாண்டா அரசாங்கத்தின் பிரதம சட்ட அதிகாரி, அந்த நாட்டு நிதி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ப்ளும்பெர்க் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், யுகாண்டாவின் என்டபே சர்வதேச விமான நிலையத்தை சீனா கையகப்படுத்தியுள்ளதாக வெளியான செய்தியை, கொழும்பிலுள்ள சீன தூதரகம் மறுத்துள்ளது.
”சீனா, யுகாண்டாவின் விமான நிலையத்தை கையகப்படுத்தியுள்ளது” என அப்பட்டமான பொய்யை யுகாண்டா சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் ஊடகப் செய்டித் தொடர்பாளர் வெளியிட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம், டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
”கடன் பொறி” தொடர்பிலான கதை மேற்குலக காலனித்துவத்துடன் மாத்திரமே உருவானது. இலங்கையில் இதனை மீண்டும் மீண்டும் மறுக்கப்படுகின்றது” என அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை சீன கடன் பொறிக்குள் சிக்கவில்லை என இலங்கை அதிகாரிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துரைத்திருந்தனர்.
பிரிவினைவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர், நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சீனா உதவிகளை வழங்கியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் செயலாளர் மைக் பாம்பியோவை, 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் சந்தித்த வேளையில் தெரிவித்திருந்தார்.
இதன் பெறுபேறாக, இலங்கை கடன் பொறிக்குள் சிக்கவில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு சொத்துக்கள் திணைக்களத்தினால் வெளியிடப்படும் வெளிநாட்டு கடன் தொடர்பிலான சாராம்சத்தின் பிரகாரம், 2021ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் இலங்கையின் முழு கடன் நிலுவை தொகையாக $35.1 பில்லியன் காணப்படுகின்றது. 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 30ம் தேதி வரை $981.0 மில்லியன் கடன் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு செலுத்தப்பட்ட கடனில் $520.6 மில்லியன், அடிப்படை கடனை மீள செலுத்துவதற்காகவும், எஞ்சிய $460.4 மில்லியன் வட்டியை செலுத்துவதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.(பிபிசி)