வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கீ சென் ஹொங், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மைச் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், குறித்த சந்திப்பு இன்று (16) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இலங்கை சீன கூட்டு முயற்சியான குயிலான் நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வருகின்ற கடலட்டை குஞ்சு இனப் பெருக்கப் பண்ணையில் சந்திப்பு இடம்பெற்றது.
இந்நிலையில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், மக்களுக்கு வளமான எதிர் காலத்தினை பெற்றுத் தரக்கூடிய முதலீடுகளையும் தொழில் நுட்பங்களையும் வரவேற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் சீன முதலீட்டு முயற்சிகளை வரவேற்பதாக தெரிவித்தார்.
கடலட்டை பண்ணை முதலீட்டின் ஊடாக ஐந்து மடங்கு இலாபத்தினை பெற்றுக் கொள்ள முடியும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முதலீட்டின் மூலம் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை நாட்டிற்கு பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.