சீனாவில் ஒரு தம்பதி மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் – அரசு
சீனாவில் ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடனான கூட்டத்துக்குப் பிறகு இந்த கொள்கை மாற்றத்துக்கு அதிபர் ஷி ஜின்பிங் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த நாட்டின் அரசு ஊடகமான ஷின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் மக்கள்தொகை பெருக்கம் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துள்ளதாக சமீபத்தில் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்தது. அந்த தரவு ஏற்படுத்திய அழுத்தத்தின் காரணமாக, சீன அரசு அந்நாட்டு மக்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவித்து, மக்கள் தொகை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
சீனாவில் குழந்தைகளின் பிறப்பு குறைவதால், நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை இளம் வயதினரை விட அதிகமாகும் கவலை எழுந்தது. இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், எதிர்காலத்தில் வயதானவர்களுக்கு ஆதரவளிக்க தேவையான பணியாளர்கள் இல்லாமல், நாடுமுழுவதும் மருத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அளவில் தேவை ஏற்படும் என்று வல்லுநர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.
முன்னதாக, சீனாவில் பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்து வந்த ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் கட்டுப்பாடு கடந்த 2016ஆம் ஆண்டு தளர்த்தப்பட்டு, அந்த எண்ணிக்கை இரண்டாக மாற்றப்பட்டது. எனினும், கொள்கை ரீதியிலான மாற்றம் தவிர்த்து பெரியளவிலான ஊக்குவிப்பு திட்டம் ஏதுமில்லாததால் இந்த திட்டம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.
இன்று சீனாவில் உள்ள இளைஞர்கள் அந்த நாட்டின் ஒரு குழந்தை கொள்கையில் பிறந்தவர்கள். இவர்களின் பெற்றோர் ஓய்வுபெறும் வயதை நெருங்குவதால் அவர்களை பராமரிக்கும் பொறுப்பு இவர்களுடையதாக மாறுகிறது. இதுமட்டுமின்றி, தற்போது ஓய்வுபெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இளைஞர்கள் பலர் இயல்பை விட அதிக நேரம் பணிபுரிய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இது இளைய தலைமுறையினருக்கு தனிப்பட்ட மற்றும் தொழில்சார் வாழ்க்கையை சமநிலைப்படுத்த இயலாத அழுத்தத்தை உருவாக்குகிறது.
அதுமட்டுமின்றி, உலகின் மற்ற சில நாடுகளை போன்று சீனாவிலும் பெண் சிசுக்கொலைகள் அதிகரித்து காணப்பட்டதால், பல லட்சக்கணக்கான சீன ஆண்கள் தங்களது வாழ்நாளில் வாழ்க்கை துணை என்று ஒருவரை பார்க்கவே போவதில்லை என்ற முடிவுடன் வாழும் அவலநிலையும் காணப்படுகிறது. அதே சமயத்தில், ஏற்கனவே ஆண்களை விட குறைந்த எண்ணிக்கையில் உள்ள பெண்களில் பலரும் இளம் வயதில் குடும்ப வாழ்க்கையை தொடங்க விரும்பாமல் உயர் கல்வி பயின்று பணியாற்றவே விரும்புகின்றனர்.(பிபிசி)