crossorigin="anonymous">
வெளிநாடு

“ஒன்றிணைந்து செயல்பட்டிருந்தால் ஒமைக்ரான் உருவாகாமல் தடுத்திருக்கலாம்”

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சவுமியா சுவாமிநாதன்

உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டிருந்தால் ஒமைக்ரான் வைரஸ் உருவாகாமலேயே தடுத்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியின் விவரம் வருமாறு

“இந்த வைரஸ் உருவாகாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு உலக நாடுகளின் கைகளில் தான் இருந்தது. ஆனால் அதை நாம் தவறவிட்டுவிட்டோம். கரோனாவுக்கு எதிரான பேராயுதம் தடுப்பூசி. அந்தத் தடுப்பூசியை உலகம் முழுவதும் சமத்துவத்துடன் பயன்படுத்தியிருந்தால் இன்று ஒமைக்ரான் உருவாகி இருக்காது.

உலக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் அளவுக்கு நம்மிடம் போதுமான அளவு தடுப்பூசிகள் இருந்தன. ஆனால், தடுப்பூசியை ஒவ்வொரு நாடு தங்கள் மக்களுக்கானது என்ற தேசியமயமாக்குதல் கொள்கையுடன் அணுகியது. அவரவர் நாட்டு மக்கள் பத்திரமாக இருந்தால் போதும் என்று மட்டுமே அனைவரும் நினைத்துவிட்டனர்.

இன்று ஒமைக்ரான் ஆப்பிரிக்க கண்டத்தில் தென் ஆப்பிரிக்க நாட்டில் உருமாறி உருவாகி இருக்கிறது. ஆப்பிரிக்காவில் இன்னும் பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி போதிய அளவில் மக்களுக்குச் சென்று சேரவில்லை.

தனது நாட்டு மக்கள் மட்டுமல்ல உலக மக்கள் அனைவருமே பாதுகாப்பாக இருக்கும் வரையில் யாருக்கும் முழு பாதுகாப்பு இல்லை என்பதை தடுப்பூசி உரிமை கொண்டாடும் நாடுகள் உணர வேண்டும். தடுப்பூசி பரவலாக உலக மக்களுக்கு சென்று சேராவிட்டால், இந்த வைரஸ் வேறு ஒரு உருவத்துடன் வந்து கொண்டேதான் இருக்கும்,…” இவ்வாறு அவர் கூறியுள்ளார்..

ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயேன், அடுத்த மாதம் ஐரோப்பாவில் ஒமைக்ரான் தான் ஆதிக்கம் செலுத்தும் வைரஸாக இருக்கும் என்று கூறியுள்ளார். பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 78,810 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அந்நாட்டுப் பிரதமர் ஒமைக்ரான் பேரலை வரும் என்று எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் 68க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 32 ஒமைக்ரான் தொற்றாளர்கள் மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டுள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, ராஜஸ்தான் என 10 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 67 − 62 =

Back to top button
error: